புதன், 6 அக்டோபர், 2021

சரியாச் செய்தீங்க

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்    


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 51

சரியாச் செய்தீங்க


 

ஜார்க்ண்ட் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் என்னுமிடத்தில் படைமுயற்சிக் கூட்டங்கள் நடைபெறவிருந்தன. அப்பகுதியின் சபையைச் சேர்ந்த மூத்தோரும், போதகரும், விசுவாசிகளும் இணைந்து அக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். அந்நாட்களில், படைமுயற்சிக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனவே, கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே குழுவினரோடும், ஜெனரேட்டர் பொருந்திய பேருந்தோடும் அப்பகுதிக்குச் நாங்கள் சென்றிருந்தோம். கூட்டம் தொடங்கியது, ஜனங்கள் திரளாக வந்து தேவ வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பிசாசின் பிடியிலிருந்த பலர் அப்போது விடுதலையும் பெற்றனனர். கூட்டம் நடத்துவதற்காக மின்சார இணைப்பு ஏதும் கிடைக்காததினால், நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் மூலமாகவே கூட்டத்தினை நடத்திக்கொண்டிருந்தோம். இறுதி நாள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜெனரேட்டர் திடீரென பழுதானது; ஜெனரேட்டரின் டீசல் தொட்டியிலிருந்து எஞ்சினுக்கு வரும் டீசல் திடீரென அளவு குறையத் தொடங்கியது. காரணத்தை அறிய முற்பட்டபோது, இடையில் உள்ள பில்டரில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அப்போது எங்களிடத்தில் மாற்று பில்டரும் இல்லாதிருந்தது. ஜெனரேட்டர் வாகனத்தை ஓட்டிவந்தவரும், ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தவருமான ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் அகஸ்டின் (அகஸ்டின் ஜெபக்குமார் அல்ல, மீடியா துறையின் ஊழியர்) ஜெனரேட்டரில் உண்டான பழுதினை என்னிடம் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்கள் அவர் தனது கைகளால் பம்ப் செய்தவாறு ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தார். அந்த ஊழியர் என்னிடத்தில், 'கிருபாகரன் அண்ணன், என்ன செய்யலாம் சொல்லுங்க' என்று கேட்டார். ஜெனரேட்டர் நின்றுவிட்டால் கூட்டம் முழுவதும் தடைபட்டுவிடும், பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டினால், ஜெனரேட்டரின் எஞ்சினே பழுதாகிவிடும் நிலை ஏற்படும், அது மிகுந்த செலவை உண்டாக்கிவிடும். ஜனங்களோ ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள், சகோதரர் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார். இதனைக் கண்ட நான் பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டும்படி சொன்னேன். அப்படியே கூட்டம் முடியும் வரை ஜெனரேட்டர் ஓடியது. கூட்டத்தின் முடிவில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்த நான், 'அண்ணன், ஜெனரேட்டர் பழுதாகிவிட்டது, எனவே செய்யக்கூடாத ஒன்றை அப்போது செய்துவிட்டேன், கூட்டம் தடைபட்டுவிடக்கூடாது என்றுதான் அப்படிச் செய்தேன்' என்று சொன்னேன். அப்போது சகோதரர், 'கிருபா, நீங்க சரியாகச் செய்தீங்க, அப்படித்தான் செய்யவேண்டும், சூழ்நிலையினைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்' என்று சொன்னார். சகோதரரின் குறி ஜனங்கள் மீதுதான், ஜெனரேட்டர் மீது அல்ல என்பது எனக்கு அப்போது தென்பட்டது. 

www.sinegithan.in

துறையை நடத்தும் முறை

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 50

துறையை நடத்தும் முறை


 

ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், ஜெம்ஸ் வெளியிடும் வி.சி.டிக்கள், பாடல் புத்தகங்கள் மற்றும் பிறவற்றை மக்களண்டை கொண்டு சேர்க்கும் பொறுப்பினை சகோதரர் ஞானராஜ் செய்துகொண்டிருந்தார். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கொடுக்கும் செய்திகளை பதிவு செய்யும் பொறுப்பும் அவருடையதாயிருந்தது. அந்நாட்களில், கேசட்டுகளிலேயே அதிகமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுவந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் சகோதரர் வழங்கும் செய்திகள், ஜெம்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள வேதாதகமக் கல்லூரி மற்றும் பிற பயிற்சி மையங்களில் சகோதரர் வழங்கும் செய்திகள் அத்தனையையும் அந்நாட்களில் பதிவு செய்தவர் அவரே. குடும்ப சூழ்நிலையின் நிமித்தமாக தமிழகம் செல்லும் நிலை உண்டானபோது, அப்பொறுப்பினை சகோதரர் நோபிள் கவனித்துவந்தார். சில நாட்களுக்குப் பின்னர், ஜெம்ஸ் மீடியா துறையில் ஆடியோ பிரிவும், வெளியீடுகளை விநியோகிக்கும் பிரிவும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. ஆடியோ பிரிவின் பொறுப்பாளராக சகோதரர் நோபிள் நியமிக்கப்பட்டபோது, விநியோகிக்கும் பிரிவினைக் கவனிக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது, ஒருமுறை பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்தின் முன் வாசலில் சிறுவர் துறை அலுவலகத்தின் ஜன்னலை ஒட்டியவாறு நான் நின்றுகொண்டிருந்தபோது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வீட்டிலிருந்து தனது அலுவலகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், வணக்கம் சொல்லிவிட்டு அங்கேயே நின்றேன். சகோதரர் எனது அருகில் வந்ததும், நின்றவராக, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையின் விநியோகப் பிரிவின் பணிகளைக் குறித்துப் பேசினார். கேன்டீன் மற்றும் வெளியீட்டுத்துறை இவ்விரண்டையும் பிசினஸாச செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் உண்டாகிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டும்; இவ்விரண்டிலும் இந்த ஆபத்து உண்டு என்று சொன்னார். ஜனங்கள் பயன் பெறட்டும், அதுவே பிரதானமானது, இலாப நோக்கில் செயல்பட்டுவிடக்கூடாது என்று சொல்லிவிட்டு, தனது அலுவலகத்தை நோக்கி விரைந்தார். அப்போது, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையை நடத்தும் முறை எனக்கு விளங்கியது.

www.sinegithan.in

சரியான இடம், சரியான ஊழியன்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்       


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 49

சரியான இடம், சரியான ஊழியன்


 

2002-ம் ஆண்டு நான் பீஹாரில் ஜெம்ஸ் ஊழியத்தில் இணைந்தேன். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை கருவந்தியா பவணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஊழியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். வாலிபர்கள் மத்தியில் பணிபுரிவது எனக்கு விருப்பமான அழைப்பு என்பதால், தொழிற்பயிற்சி மையத்தின் மாணவர்களை பணித்தளத்தின் ஆத்துமாக்களாகக் கருதி எனது பணியினைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். 2004-ம் ஆண்டு எனக்குத் திருமணம் ஆனது. திருமணம் முடிந்து மனைவியுடன் நான் தூத்துக்குடியிலிருந்து பீஹார் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்ட சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், 'தம்பி, நீங்க சிக்காரியா பணித்தளத்திலேயே இறங்கிவிடுங்கள்' என்று சொன்னார். 'சரி அண்ணன்' என்ற பதிலுடன், டெஹ்ரி ஆன் சோன் ரயில் நிலையத்தில் இறங்கி, மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினருடன் சிக்காரியா பணித்தளத்திற்கு வந்து சேர்ந்தேன். ஓரிரு நாட்கள், விருந்தினர் விடுதியிலேயே தங்கியிருந்தேன். அப்போது என்னைச் சந்தித்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் 'கிருபா, உங்களை ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன், உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்டார். நானோ பொறியியல் பயின்றவன், எனினும் சகோதரரிடம், 'அண்ணன், 'உங்களது விருப்பமே, எனது விருப்பம்' என்று பதில் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டேன். எனது மனைவி ஜெம்ஸ் ஆங்கிலப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டாள். ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டபோது, சகோ.பிரைட் கென்னடி மீடியா துறையின் மீடியா துறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். சகோ.ஞானராஜ், சகோ பெல்ஷாத், சகோ.பிரபாகரன் ஆகியோர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். துறையில் புலம் பெற்ற இத்தகையோருடன் இணைந்து ஓடுவது எனக்கு எப்படி சாத்தியமாகுமோ என்ற கலக்கம் எனக்கு தொடக்கத்தில் உண்டானது. தொடர்ந்து வந்த நாட்களில், மேற்கண்ட அனைவரும் வெவ்வேறு பணித்தளத்திற்கு மாறுதலாகிச் சென்றதால், ஜெம்ஸ் வெளியீட்டுத் துறை ஒருங்கிணைப்பாளராக நான் பணியில் அமர்த்தப்பட்டேன். அன்று முதல் எனக்குள் இருந்த எழுத்து தாலந்து மேலும் கர்த்தரால் வளர்க்கப்பட்டதை அறிந்தேன். எங்கும் சென்று தட்டச்சு பயிலாத எனது விரல்களை யுத்தத்திற்குப் பழக்குவித்தார் தேவன். எழுதிக்கொண்டிருந்த என்னை எழுத்தாளனாகவே மாற்றியது இந்த பணிமாற்றமே. சரியான இடத்தில், சரியான ஊழியரைப் பணியில் அமர்த்துபவராக சகோதரரைப் புரிந்துகொண்டேன். 
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.(சங் 144:1)

www.sinegithan.in

இரட்டை ஆசீர்வாதம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 48

இரட்டை ஆசீர்வாதம்


 

வேதத்தின்படியான ஓர் விளக்கம் கேட்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். சகோதரர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார், இரண்டு அல்லது மூன்று வெள்ளைக் காகிதங்கள் அவர் எழுதிக்கொண்டிருக்கும் காகிதத்திற்குக் கீழே இருந்ததை நான் கண்டபோது, 'ஐயோ, இப்பொழுதுதான் எதையோ அண்ணன் எழுதத் தொடங்கியிருக்கிறார், உள்ளே வந்து இடையூறு செய்துவிட்டோமே' என்று தயங்கி நின்றேன். அவரோ, தான் எழுதிக்கொண்டிருந்த அந்த வாக்கியத்தினை மாத்திரம் இடையில் விட்டுவிடாமல் எழுதி முடித்துவிட்டு, பேனோவை வைத்தவராக என்னை நோக்கிப் பார்த்தார். நான் எனது சந்தேகத்தை முன் வைத்தேன், 'அண்ணன், சிலர் தூதர் பாஷை என்று சொல்லப்படுவது பெண் குரலுக்கு ஒப்பாக இருக்கும் என்று சொல்லுகிறார்களே, அது குறித்து வேதத்தின் நிலை என்ன?' என்று கேட்டேன். அப்போது சகோதரர், நான் கேட்டக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதற்கு முன்னர், மற்றும் ஒரு காரியத்தை என்னிடத்தில் பேசத்தொடங்கினார், 'Satan's offsprings' என்று ஒரு ஊழியர் தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். நானோ அதனைக் கண்டதும், அந்த ஊழியரிடத்தில் இது வேதத்தின்படியானது அல்லவே என்று சொன்னேன். சாத்தான் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. தனது எண்ணிக்கையைப் பரப்பிக்கொள்ள அவனால் முடியாது, ஆரம்ப நாட்களில் எந்த எண்ணிக்கையில் அவன் இருந்தானோ அதே எண்ணிக்கையில்தான் இன்றும் இருக்கிறான். மனிதர்களாகிய நமக்கோ பலுகிப் பெருகும் பாக்கியத்தைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்றார். அதனைத் தொடர்ந்து, எனது கேள்விக்கும் விடை தந்தார். 'காபிரியேல்' 'மிகாவேல்' என்றே தூதர்களின் பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன; மேலும் 'தூதன்' என்றும் 'தூதனானவர்' என்றுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் சொல்லும் காரியங்களுக்குத் துணையாக வேதவசனங்கள் நிற்கவேண்டும் என்று சொன்னார். தூதர்களின் பாஷை பெண்குரலைப் போல இருக்கும்; என்று சொல்லுவதற்கு வசனத்தில் இடமில்லை என்று சொன்னார். இந்த சத்தியங்களைக் கேட்டதும், 'அண்ணன், இன்றைக்கு எனக்கு இரட்டை ஆசீர்வாதம்' என்று சொன்னவனாக அறையை விட்டு வெளியே வந்தேன். 

www.sinegithan.in

கல்லெடுத்த சிறு கைகள்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

                              

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 47

கல்லெடுத்த சிறு கைகள்


 

23 ஜுலை 2014 அன்று காலை சுமார் 11.10 மணி, செப்டம்பர் 2014 மாதத்தின் ஜெம்ஸ் சத்தம் பத்திரிக்கையில் வெளிவரவிருக்கும் சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் எழுதிய 'திருப்தியான வாழ்வு' என்ற செய்தியினைக் காட்டுவதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். அதனைக் கையில் வாங்கிக்கொண்ட அவர், திடீரென, அன்று காலை ஜெம்ஸ் வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் தான் பகிர்ந்துகொண்ட தியானச் செய்தியை என்னுடன் பகிர்ந்துகொள்ளத்தொடங்கினார். 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்' என்று இயேசு சொன்னது எப்போது? என்று என்னிடத்தில் சகோதரர் கேட்டபோது, பதில் ஏதும் நான் சொல்லாமல், அத்தனையும் அவரிடமிருந்தே வெளிவரட்டும் எனக் காத்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லப்போகும் வேத தியானத்தைக் கேட்க ஆயத்தமானேன். அப்போது அவர்: விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் கல்லெறியும்படி இயேசுவினிடத்தில் கொண்டுவந்த சம்பவத்தைக் குறித்து (யோவான் 8:3-9) பேசிக்கொண்டிருந்தார். ஸ்திரீயை இயேசுவுக்கு முன்பாக நிறுத்தி, நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறியப்படவேண்டும் என்று மோசேயின் வார்த்தைகளை அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, இயேசுவோ, 'உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்' என்று சொல்லி, குனிந்து தரையிலே எழுதினார். அப்போது, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள் (யோவா 8:9) என்று வேதத்தில் போடப்பட்டிருக்கின்றதே. ஒருவேளை, பெரியோர் தங்கள் பாவங்களை உணர்ந்து போயிருக்கலாம்; ஆனால், சிறியவர்களும் அங்கு கல்லெறிய வந்திருந்தார்களே; சிறியவர்கள் அங்கு வந்ததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியை முன் வைத்தார். பெரியவர்கள் என்ன செய்கின்றார்களோ அதையே செய்யும் சிறுவர்கள் இவர்கள் என்று சொன்னார். என்னவென்றும், எதற்கென்றும் தெரியாது ஆனால், பெரியவர்களின் செய்கைகளைப் பார்த்து அப்படியே செய்பவர்கள் அவர்கள் என்று சொன்னர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், நாம் என்ன செய்கின்றோமோ அதைத்தான் நம்மைத் தொடருவோரும் செய்வார்கள்; எனவே, நாம் நமது செய்கைகளில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தார். நாம் பாதையில் நடப்பவர்கள் மாத்திரமல்ல, பாதை காட்டுபவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சகோதரரின் சந்திப்பு நினைப்பூட்டியது.

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் (1கொரி. 11:1,2) என்ற பவுலின் வார்த்தைகளை நானும் சொல்லத் தகுதியாகவேண்டுமே என அப்போது நினைத்தேன். 

www.sinegithan.in

மனப்பூர்வமான மன்னிப்பு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      

        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 46

மனப்பூர்வமான மன்னிப்பு


 

2005-ம் ஆண்டு சமூக விரோதிகள் உருவாக்கிய பிரச்சனையில், ஜெம்ஸ் வளாகத்தைச் சுற்றிய கிராமத்தினர் அனைவரும் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தனர். தேர்தலில் ஆதாயம் பெற விரும்பிய வாக்காளர் ஒருவர், ஜெம்ஸ் ஊழியங்களுக்கு விரோதமாக செயல்பட்டு தனது பெயரைப் பெருக்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜெம்ஸ் ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டனர்; நானும் தாக்கப்பட்டேன். கிராமத்து மக்களில் சிலர் கோர்ட்டில் எங்களுக்கு விரோதமாக வழக்கு தொடர்ந்தனர். அதனால் அவ்வப்போது, கோர்ட்டிற்கு சென்று திரும்பும் நிலை உருவானது. தீர்ப்பு வரும் நாள் நெருங்கியது; அந்நாளில் கோர்ட்டிலிருந்து எங்களுக்கு அழைப்பு வர, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் அடிக்கப்பட்ட ஊழியர்கள் சிலரும் கோர்ட்டிற்குச் சென்றிருந்தோம். விசாரிக்கப்படும் நேரம் வரும் வரை சகோதரருடன் கோர்ட் வளாகத்திற்கு வெளியிலேயே வாகனத்தில் காத்துக்கொண்டிருந்தோம். நேரமாகிக்கொண்டேயிருந்தபடியினால், அருகிலிருந்த கடைகளில் தேனீர் மற்றும் திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். தீர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு விரோதமாகவே அமைந்துவிட்டதை அப்போது நாங்கள் அறிந்திருந்தோம். அப்போது, நீதிபதி விசாரிக்கும் நேரத்தில் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை ஊழியர்களாகிய எங்களுக்கு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவர்களை மன்னிப்பது நமது கடமை' எனவே, நீதிபதி என்ன கேட்டாலும், 'தண்டணை வேண்டாம் மன்னித்துவிடுங்கள்' என்பதையே பதிலாகச் சொல்லும்படி சகோதரர் சொல்லிக்கொண்டிருந்தார். சகோதரர், வாகனத்தின் முன்புற இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருந்தார். அப்போது, ஒரு தாய் கண்களில் கண்ணீரோடு சகோதரரைச் சந்திக்க வந்தார். அவர் யாரென்பதை நான் அறியாதவனாயிருந்தேன், எனினும், இரு கரங்களைக் கூப்பியவாறு சகோதரரிடம் செய்த தவற்றிற்காக மன்னிப்பு கேட்பதை அந்தத் தாயின் செய்கையிலும், வார்த்தைகளிலும் கண்டுகொண்டேன். கோர்ட் கூடியது, சகோதரர் அழைக்கப்பட்டபோது, 'தான் அவர்களை மனப்பூர்வமாக மன்னிப்பதாகவும், தண்டணை வழக்கவேண்டாம்' என்றும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். சகோதரரைத் தொடர்ந்து ஊழியர்களாகிய நாங்கள் அழைக்கப்பட்டோம்; நீதிபதி ஒவ்வொருவராக எங்களை அழைக்க, நாங்களும் சகோதரர் கற்றுத்தந்த பிரகாரம், எதிராளிகளை மன்னிக்கும்படி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டோம். என்னை அழைத்த நீதிபதி, 'உன்னை அடித்தது இவன்தானா? கையில் என்ன வைத்திருந்தான்? எப்படி அடித்தான்? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்? மன்னித்துவிடுங்கள் என்று சகோததரர் கற்றுத் தந்தது போலவே நானும் மாறுத்தரம் சொன்னேன். விசாரணைக்குப் பின்னர் வீடு திரும்பினோம். தொடர்ந்து, கிறிஸ்துவின் அன்பினை வெளிக்காட்டும் பொருட்டு, வெகுமதிகளுடன் அவர்களது இல்லங்களுக்கும் சென்று அவர்களைச் சந்தித்தோம். சகோதரருடன் கிராமத்திற்குள் வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்தது எனக்கு புதியதோர் அனுபவம். கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படியே நம்மை வெளிக்காட்டவேண்டும் என்று சகோதரர் செய்த செயல், மனப்பூரணமான மன்னிப்பை ஊழியர்களாகிய எங்கள் உள்ளங்களில் அனுபவிக்கச் செய்தது. 

www.sinegithan.in

வியாதியுள்ளவங்கய்யா, தொந்தரவு செய்யாதீங்க

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் 

         

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 45

வியாதியுள்ளவங்கய்யா,

தொந்தரவு செய்யாதீங்க


 

ஒருமுறை, அலுவலகப் பணியின் நிமித்தம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைச் சந்திக்கும்படியாக நானும், ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை அவர்களும் சென்றிருந்தோம். அந்நாட்களில், நான் ஜெம்ஸ் வாகனத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்; அத்துறையின் பொறுப்பாளராக சகோதரர் ராஜதுரை பணிசெய்துகொண்டிருந்தார். சகோதரரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சில அலுவலகக் காரியங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சில விஷயங்களில் பாட்னாவில் இருந்த ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை தொடர்புகொள்ளவேண்டிய சூழ்நிலை உண்டானது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையினிடம், சகோதரர் E.C.ஜான்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி, தனது நேர்முக உதவியாளர் சகோதரி ஷீலா டத்தியிடம் சொல்லச் சொன்னார். சகோதரி ஷீலா டத்தி பலமுறை E.C.ஜான்சன் அவர்களுக்குப் போன் செய்துகொண்டேயிருந்தார், ஆனால், வீட்டிலோ தொலைபேசியினை யாரும் எடுக்கவில்லை. 'அண்ணன், E.C.ஜான்சன் வீட்ல யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை' என்ற தகவலை சகோதரர் ராஜதுரை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அலுவலகக் காரியங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். இடையில், மீண்டும் சகோதரி ஷீலா டத்தி அவரைத் தொடர்பு கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த ஒருவர் தொலைபேசியினை எடுத்தவாறு, 'அண்ணன், தூங்கிக்கொண்டிருக்கிறார்' என்று பதில் சொன்னதாகச் சகோதரி சொன்னார். இதனைக் கேட்ட சகோதரர் ராஜதுரை 'அகஸ்டின் அண்ணன் கூப்பிடுகிறார்னு சொல்லுங்க' என்று சொல்லியவாறு சகோதரரின் அறையிலிருந்து வெளியே சென்று சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைக்கச் சென்றார். அப்போது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையை நோக்கி: 'அவங்கல்லாம் வியாதியுள்ளவங்கய்யா, தூங்கட்டும், தொந்தரவு செய்யாதீங்க' என்றார். தான் அழைத்தும் அவர் எழும்பவில்லையே என்ற கோபம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் முகத்தில் காணப்படாததை அப்போது நான் கண்டேன். அவசரமான காரியமாயிருந்தபோதிலும், வியாதியுள்ளவர்கள் மேல் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கு இருந்த கரிசனை அப்போது எனக்குத் தெரிந்தது.

www.sinegithan.in