சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி
28 March 2014
அனைத்து சபை ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் ஒழுங்கு செய்திருந்த கன்வென்ஷன் கூட்டங்கள் சந்துவாவில் நடைபெற்றது; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். சகோதரருடன் ஜெம்ஸ் மீடியா துறையினரான நாங்களும் உடன் சென்றிருந்தோம். அங்கிருந்த ஓர் ஊழியரின் வீட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தங்கவைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் கூட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற்றது; கூட்டங்களை முடித்து சகோதரர் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது, நானும் அவருடன் வாகனத்தில் சென்றேன், சகோதரர் அறைக்குள் நுழைந்ததும், அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று அவரை விட்டு விட்டு உடனே கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தேன். அடுத்த நாளோ மே 3, எனது பிறந்த நாள், எனவே காலையிலேயே சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவரும் நோக்கத்தில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் விக்டர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் சகோதரர். அவர்கள் உரையாடி முடிக்கட்டும் என்று அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சகோதரர், 'என்ன கிருபா, உள்ள வாங்க' என்று கூப்பிட்டார். அவரது அழைப்பினை ஏற்று அறைக்குள் நுழைந்தேன். அண்ணன் இன்று எனக்குப் பிறந்த நாள் ஜெபிப்பதற்காக வந்தேன் என்று சொன்னவாறு, உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த படுக்கைக்கு முன்னால் முழங்கால் படியிட்டேன். சகோதரர் ஜெபித்து முடித்தார்; நான் எழுந்து சற்று நேரம் அந்த அறைக்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, காற்றாடி ஓடாத நிலையில், அவரது உடல் வியர்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. அண்ணன், என்ன கரனட் இல்லையா என்று கேட்டேன். ஆமாம், என்று பதில் சொன்னார். நேற்று இரவு எப்படி தூங்கினீர்கள் என்று கேட்டேன், அது பீஹார்ல பழகிப்போச்சு என்று பதில் கொடுத்தார். ஒரு சின்ன ஜெனரேட்டர் இருக்கிறது, அதனை இங்கு கொண்டுவரட்டுமா என்று நான் கேட்டேன். நீங்க எந்த ஜெனரேட்டர்ல தூங்குகிறீர்கள் என்று கேட்டார்; மௌனமாய் நின்றேன். எனக்கு மட்டும் எதுக்கு ஜெனரேட்டர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார். இந்த தலையனை உரை வியர்வையாகிவிட்டது, அதை மட்டும் மாற்றினால் நன்றாயிருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உடன் ஊழியர் அந்தத் தலையணை உறையை மாற்றிக்கொடுத்தார். அவரது அறையை விட்டு வெளியே வந்த நான், சகோதரரிடம் மீண்டும் அனுமதி கோராமல், சின்ன ஜெனரேட்டரை எடுத்து, அவரது வாகன ஓட்டியாக இருந்த சகோதரர் சுஷில் அவர்களிடம், கொடுத்து, அதனை இயக்கி அவரது அறைக்கு கரன்ட் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தேன். தனிமையில் அவரது தன்மையைக் கண்ட நான் இவர் 'பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி' என்று அறிந்துகொண்டேன்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக