சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
தலைவனின் தந்திரம்
2 April 2014
2009-ம் ஆண்டு பெத்துலா என்னுமிடத்தில் ஜெம்ஸ் ஊழியர்களுக்கான குடும்பக் கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் மனைவி மற்றும் மகனுடன் அக்கூடுகைக்குச் சென்றிருந்தேன். ஆனந்தமான வேளை அது; நல்லதோர் இயற்கையான சூழ்நிலை. பசுமை போர்த்திய பூமி. ஒரு புறம் கூட்டம் கூட்டமாய் மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன; மற்றொருபுறம் மரக்கிளைகளில் குரங்குகள் குதித்து விளையாடிக்கொண்ருந்தன. குரங்குகளின் குதிப்புக்கு ஈடாக சிறுவர்களின் கால்களும் கூட குதியாட்டத்தில் மிதந்தன. குடும்பம் குடும்பமாய் தங்குவதற்கென சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகளில் நாங்கள் தங்கியிருந்தோம். ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளவும், ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற நாட்களாய் அமைந்தன அவை. அது ஒரு பகல் வேளை, கூட்டங்களை முடித்து அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன். அங்கே, அரங்கத்தின் படிக்கட்டுகளில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆசனம் செய்பவரைப்போல இருந்தார், அவருடன் அவரது துணைவியார் திருமதி ரூபலேகா ஜெபக்குமாரும் அமர்ந்திருந்தார். அவரை இந்தக் கோலத்தில் கண்டதும், ஊழியர்கள் பலர் தங்கள் கைகளிலிருந்த கேமராக்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நானும் எனது கேமராவில் அவரைப் பதிவு செய்ய விரைந்து சென்றேன், புகைப்படம் எடுத்தேன். சில நிமிடங்கள் கழித்ததும், கோலத்தைக் கலைத்து, சாதாரணமாக சிரித்தவாறு உட்கார்ந்திருந்தார் சகோதரர். இதனைக் கண்ட நான், எனது மனைவி மற்றும் மகன் ஜான் சாமுவேல் இருவரையும் அழைத்து அவருடன் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் எழுந்ததும், வரிசையாக வந்து நின்றன பல ஊழியர் குடும்பங்கள். ஒவ்வொருவரும் கும்பம் குடும்பமாக சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். புகைப்படம் எடுத்து முடித்தபின்னும் அவரை விட்டு விலகாத பல குடும்பத்தினர்கள், பல்வேறு காரியங்களைக் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர்; அவரும் சளைக்காது பேசிக்கொண்டிருந்தார். தன்னுடன் பணி செய்யும் ஊழியர்களிடம் நெருங்கிச் செல்ல, தலைவர் அவர் கையாண்ட தந்திரமோ அது என அப்போது எனக்குச் சிந்திக்கத் தோன்றிற்று. நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம் (2கொரி 12:16) என்று பவுலும் சொன்னாரல்லவா.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக