சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
காலையிலே, காலருகிலே
2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் தெருவாக அடித்துக்கொண்டு இழுத்துச் சென்றனர்; மயங்கிய நிலையில் கீழே சரிந்த என்னை மரித்துவிடுவேன் என்று எண்ணி, வயலில் இழுத்து வீசிவிட்டுச் சென்றனர். இரவு சுமார் 7.30 மணி வரை வயலில் எழும்ப இயலாது, தண்ணீரில் கிடந்தேன்; கையிலிருந்த செல் போனும் தண்ணீரில் நனைந்து கிடந்தது; ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் பாஸ்கருடைய செல்போனை அப்போது தற்காலிகமாக நான் உபயோகித்துக்கொண்டிருந்தேன். எனக்கு சந்று மயக்கம் தெளிந்தபோது, நீரில் நனைந்திருந்தும் அந்த செல்போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது மகள் ஜாய் பேசினாள். 'அங்கிள், எங்க இருக்கீங்க?' என்று கேட்டாள், 'ஏதோ ஒரு வயலுக்குள், நீரில் கிடக்கிறேன்' என்று பதில் சொன்னேன். அதனைத் தொடர்ந்து, உடன் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் என்னைக் கண்டெடுத்து, ஜெம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். வலது கையையோ, வலது காலையோ அசைக்க இயலாத நிலையில் படுக்கையில் நான் படுத்திருந்தேன். அந்நாட்களில், ஒவ்வொரு நாள் காலையிலும் வளாகத்தில் நடைபெறும் காலை வேத தியானத்தை முடித்துவிட்டு, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் மருத்துவனையில் படுக்கையிலிருக்கும் எங்களைப் பார்த்து தவறாது ஜெபித்துவிட்டுப் போவார். ஒரு நாள் காலையில் நன்றாக நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, யாரோ எனது கால்களைத் தொடுவதை உணர்ந்து கண்களைத் திறந்தேன், எனது கால்களில் கரங்களை வைத்தவாறு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஜெபித்துக்கொண்டிருந்தார். வேதனையின் மத்தியிலும் தேவனையே நோக்கிப் பார்க்க, காலைதோறும் அவரது வருகை எங்களுக்குக் களிம்பாயிருந்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக