Skip to main content

போதகர் கே.ஜே. ஆபிரகாம்

 

 

போதகர் கே.ஜே. ஆபிரகாம்







இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்திருந்த நாட்கள் அவை. எப்போதும் ஆவிக்குரியவைகளின் மேலேயே நாட்டம் கொள்ளவே மனதில் வேட்கை அதிகரித்திருந்த வேளை அது. ஆலய ஆராதனைகளில் தவறாது ஒவ்வொரு நாளும் பங்கேற்கும் பழக்கத்திற்குள் வாழ்க்கையினை அர்ப்பணித்துக்கொண்டதுடன், ஆங்காங்கே நடைபெறும் ஆவிக்குரிய கூட்டங்களிலும், முகாம்களிலும் பங்கேற்று வேளா வேளைக்கு அவர் தரும் உணவினைப் பெற்றுக்கொள்வதுடன், மேலும் வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன். தினமும் தவறாமல் தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிப்பது, அவர் தரும் வார்த்தைகளை வேத வாசிப்பின்போது பெற்றுக்கொள்வது என என்னால் இயன்ற பெலத்தைக் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அஸ்திபாரமிட்டுக்கொண்டிருந்தேன்; என்றாலும், யாராவது மூத்தவர்கள் சிலர் இத்தகைய ஓட்டத்தில் எனக்கு உடனிருந்து உதவினால் இன்னும் மேன்மையானவைகளைத் தெரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் பாக்கியமாயமையுமே என்ற எண்ணங்கள் அவ்வப்போது என் நினைவில் வந்து வந்து சென்றுகொண்டிருந்தன. இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், இனி என்ன செய்யவேண்டும்? என்ற பெரியதோர் கேள்விக்கு முன் பதிலளிக்கத் தெரியாதவனாக பல நாட்கள், மாதங்கள் நின்றுகொண்டிருந்தேன். அத்தகைய நேரத்தில் எனக்கு அறிமுகமானவரே தாத்தா கே.ஜே ஆபிரகாம். தூத்துக்குடி மாவட்டத்தின் நாசரேத் நகருக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த தேவ சபையில் தலைமைப் போதகராக ஊழியம் செய்துகொண்டிருந்தார். ஆலயத்தில் வாரம் ஒருமுறை வேதபாட வகுப்பினையும் நடத்திக்கொண்டிருந்தார். 


போதகரல்ல, தாத்தாவாக


முதன் முதலாக அவரைச் சந்தித்தபோது, நான் யார் என்பதை என்னோடு கூட வந்திருந்த சகோதரர் அறிமுகப்படுத்திவைத்தார். பாஸ்டர், பாஸ்டர் என்று நாங்கள் அவரை அழைக்கத் தொடங்கினதைக் கவனித்த அவர், 'பாஸ்டர் வேண்டாம், தாத்தா போதும்' என்றார். எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. எனினும், அன்று முதல் அவரை பாஸ்டர் என்று அல்ல, தாத்தா என்றே நாங்கள் அழைக்கத் தொடங்கினோம். மேய்ப்பன் என்ற ஸ்தானத்தையும் தாண்டி, தாத்தா என்ற உறவில் உடன் வைத்துக்கொண்டது எங்கள் அனைவருக்கும் அப்போது கிடைத்த பாக்கியமே.  தொடர்ந்து அவரது வேதபாட வகுப்புகளில் பங்கேற்றுவந்த நான், முழுகி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்ற சத்தியத்தினை உணர்ந்துகொண்டபோது, அதற்கு ஆயத்தமாகத்தொடங்கினேன். தேவனுடைய சித்தத்தின்படி பாவ மன்னிப்பின் நிச்சயத்திற்கென்று, 1994-ம் ஆண்டு முழுகி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன். பாரம்பரிய சபையினிலே மிகவும் பக்திவைராக்கியமாக பெற்றோர்களால் வளர்க்கப்பட்டிருந்த எனக்கு, அந்த நிகழ்வும் நாளும் மறக்க இயலாததே! ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபின், இந்த சபைக்குத்தான் வரவேண்டும் என்று எந்த ஒரு ஆலோசனையினைக்கூட எங்களிடம் கூறாது, தேவனுக்கு முன் தனது கடமையினை மாத்திரம் நிறைவேற்றிய அந்த தேவ மனிதர் இன்றும் எனது கண்களுக்கு முன் உயர்ந்துதான் நிற்கிறார். பின்னர், வாரம் ஒருமுறை அவர் நடத்தும் வேதபாட வகுப்புகளில் கலந்துகொள்ள ஆசித்து, சகோதரர்கள் சிலர் ஒன்றாக இணைந்து தவறாது செல்லத் தொடங்கினோம். என்றபோதிலும், சில நாட்ளுக்குப் பின் செல்ல இயலாது போனதினால், வேறொரு நாளில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது, நாங்கள் அவரை நோக்கி, 'தாத்தா, எங்களால் இப்போது வேதபாட வகுப்பிற்கு வர இயலவில்லை; அந்த நாள் எங்களுக்கு உகந்ததாக இல்லை' என்று கூறினோம். அதைக் கேட்டதும், 'அப்படியென்றால் எப்போது வர முடியும்?' என்று எங்களிடம் கேட்டார்; நாங்கள் வியாழக்கிழமையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொன்னோம். எங்களது பதிலைக் கேட்டதும், சரி அந்த நாளிலேயே வாருங்கள் என்று சொல்லிவிட்டார்; இதனை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அது ஓர் வியாழக்கிழமை; வேதபாட வகுப்பிற்காக சகோதரர்கள் அனைவரும் ஆயத்தமுடன் அவரது சபைக்குச் சென்றடைந்தோம். இன்று என்ன சொல்லித்தருவார்? என்ற கேள்வி எங்கள் உள்ளத்தில் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, அவரோ எங்களை நோக்கி, 'இன்று வேதத்தின் எந்த புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். சகோதரர்கள் நாங்கள் அனைவரும், ஒருவரையொருவர் திரும்பிப் பார்க்க, நானோ சடக்கென்று, 'வெளிப்படுத்தல் புத்தகத்திலிருந்து' என்று பதிலளித்தேன். அப்போது நான் பலமுறை அதனை வாசித்துக்கொண்டிருந்ததினால், அதனை மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் அப்படிச் சொன்னேன். எத்தனை மூத்த போதகராயிருப்பினும், எனது விருப்பத்தை அவர் நிராகரிக்கவில்லை; வெளிப்படுத்தல் புத்தகத்திலிருந்தே வேதபாட வகுப்பினைத் தொடங்கினார். 1996-ம் ஆண்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்காக சென்னை சென்றுவிட்ட காரணத்தினாலும், அதன் பின்னர் பணியின் நிமித்தம் இராஜஸ்தான் சென்றுவிட்டதினாலும், பின்னர் மிஷனரியாக அர்ப்பணித்து பீஹார் சென்றுவிட்டபடியினாலும் அவரை மீண்டும் சந்திக்க இயலாமற்போயிற்று. என்றபோதிலும், சுமார் இரண்டு ஆண்டுகள் ஓர் ஆவிக்குரிய தகப்பனோடு இருந்த உணர்வில் இன்றும் என் ஆத்துமாவுக்கு திருப்தி உண்டு. 'குட்டப்பன்' என்று தன்னைக் குறித்து அடிக்கடி அவர் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் இன்றும் எனது மனதை விட்டு நீங்காதவை; சிறுவனாயிருந்தபோது எனது மகனையும் அவ்வாறே அழைத்துவந்தேன். 


பிரியாணி தின்னாச்சி, பழங்கஞ்சி என்னத்துக்கு? 


அந்நாட்களில், நான் பீஹாரில் ஜெம்ஸ் ஸ்தாபனத்தில் மிஷனரியாக பணிசெய்துகொண்டிருந்தேன். ஒருமுறை விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தபோது, 'கருங்குளம்' என்ற ஊரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நற்செய்திக் கூட்டங்களில், போதகர் கே.ஜே. ஆபிரகாம் செய்தியளிக்கிறார் என்ற செய்தியினை அறிந்து, அக்கூட்டத்தில் பங்கேற்கும்படியாகப் புறப்பட்டுச் சென்றேன். முதல் நாள் கூட்டம் நன்றாக நடந்து முடிந்தது; போதகர் கே.ஜே. ஆபிரகாம் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். முதல் நாள் கூட்டம் முடிந்ததும், அவரை சந்திக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும் என்ற விருப்பத்தில், அவர் தங்கியிருந்த வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தேன். அங்கிருந்த ஊழியர் சகோ. டேனியல் முரளி மூலமாக எனது விருப்பத்தைத் தெரிவித்தபோது, அந்த சகோதரர் என்னை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.  'என்னை எப்படி அறிமுகம் செய்துகொள்வது' 'நான் ஸ்ரீவைகுண்டத்தில் வேதபாடம் கற்றதெல்லாம் இப்போது இவருக்கு ஞாபகம் இருக்குமா?' போன்ற கேள்விகள் எனது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க, என்னை அறிந்திருந்த, நான் பயின்ற பள்ளியில் உடன் பயின்ற  சகோ. டேனியல் முரளி அவருக்கு குறுகிய நேரத்தில் அறிமுகம் செய்துவைத்தார். ஜனங்கள் வந்துபோய்க்கொண்டிருந்ததினால், அதிகம் பேச இயலவில்லை, ஜெபித்துவிட்டு உடனே அறையிலிருந்து வெளியே வந்தவனாக, அங்கிருந்த சில அறிமுகமானவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, என்னை நோக்கி வந்த அந்த ஊழியர் (என்னை அறிமுகம் செய்தவர்), என்னை நோக்கி, 'சுந்தர், நீதான் நாளைக்கு கூட்டத்தில பேசணுமாம், தாத்தா சொன்னாங்க' என்று சொன்னார். என்னால், சகோதரர் டேனியல் முரளியின் வார்த்தைகளை நம்ப இயலவில்லை, என்னை கிண்டல் செய்வதற்காக சொல்லுகிறாரோ! என்று சிரித்த வண்ணம் டேனியல் முரளியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவரோ, 'உண்மையாகத்தான் சொல்கிறோன், தாத்தாதான் சொன்னாங்கள், நீதான் நாளைக்கு பேசணுமாம்' என்றார். நானோ, சற்று திகைத்தவனாக, இது உண்மைதானா? தாத்தாகிட்ட போய் ஒருமுறை கேட்டுவிடுவோமா? என்றெல்லாம் எண்ணத்தொடங்கினேன். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் அவரைச் சந்தித்திருக்கின்றேன்; இப்போது நான் ஆவிக்குரிய வாழ்க்கையில் எப்படி இருக்கின்றேன்? என்னால் பிரசங்கம் பண்ண முடியுமா? திடீரென்று என்னை எப்படி கூட்டத்தில் பேச அனுமதிக்கிறார்? அவருக்கு முன் இதுவரை நான் ஒரு பிரசங்கமும் செய்ததில்லையே? என்ற மேலும் சில கேள்விகள் என்னை துளைத்துக்கொண்டிருந்தன. என்றாலும், ஊழியராயிருக்கும் அந்த சகோதரர் பொய் சொல்லமாட்டார் என்ற உறுதியில், அடுத்த நாள் லாசருவைப் பற்றிய செய்தியோடு சென்றிருந்தேன். கூட்டம் நடக்கும் இடத்தை அடைந்ததும், கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்துகொண்டேன். கூட்டம் ஆரம்பமானது, சகோதரர் டேனியல் முரளி என்னிடத்தில் வந்து, தாத்தா முன்ன கூப்பிடுறாங்க என்றார். எத்தனை பெரிய மனிதர் அவர், அவரருகில் சென்று அமர்வதா? என்ற கேள்வி ஒருபுறம் என்னை ஆட்கொள்ள, அவருக்கு முன் பேசும்போது நான் எதிலும் தவறிழைத்துவிடக்கூடாதே என்ற நினைவும் என் எண்ணத்தில் நின்றுகொண்டேயிருந்தது. 

குறிப்பிட்ட நேரத்தில் பிரசங்கத்தை முடித்தேன், எனது பிரசங்கத்திற்குப் பின்பு அவர் பிரசங்கம் செய்வார் என்று எதிர்பார்த்தவனாக இருக்கையில் வந்து அமர்ந்தேன். அப்போது, பேசத்தொடங்கிய அவர், 'பிரியாணி தின்னாச்சி, பழங்கஞ்சி என்னத்துக்கு?' என்று சொல்லிவிட்டு ஜெபித்துவிட்டு கூட்டத்தை நிறைவு செய்தார். இத்தனை பெரிய மனிதராயிருந்தும், வயதிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் எத்தனையோ சிறியவனாயிருந்த என்னை நம்பி, தனது மேடையினையே எனக்கு பகிர்ந்துகொடுத்த அந்த மனிதர் எத்தனை உயர்ந்தவர். 


உனக்கு ஒன்னுமில்ல


ஒருமுறை வாலிபனாயிருந்தபோது, சரீரத்தில் மிகவும் வியாதிப்பட்டவனாக, வீட்டினுள் படுக்கையிலேயே  முடங்கிக் கிடந்தேன். எழுந்திருக்கவும், வெளியே செல்லவும்கூட இயலாதவனாக அறைவீட்டிற்குள்ளேயே கிடந்தேன். அநேக சகோதரர்களும், உறவினர்களும் என்னைப் பார்க்க வந்தபோதிலும், பரிதாபமான வார்த்தைகளையே பேசிக்கொண்டிருந்ததினால், 'எனது வாழ்க்கை இப்படியாயிற்றே, என்னைப் போன்ற பிற வாலிபர்கள் எத்தனை வலிமையாக இருக்கின்றார்கள்? இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட எனக்கு, அவருக்காக ஓடவேண்டும் என்ற விருப்பம் கொண்ட எனக்கு, ஜெபக் குழுக்களில் ஆர்வமாக பங்கெடுத்துக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் இத்தகைய நிலை?' என்ற கேள்விகள் மாத்திரமே எனது சிந்தையில் ஓடிக்கொண்டிருந்த நாள்கள் அவை. அப்போது, ஒரு முறை செந்தியம்பலத்தில், எனது வீடு அமைந்திருக்கும் தெருவின் முனையிலிருக்கும், போதகர் சாலமோன் அவர்களது வீட்டிற்கு தாத்தா கே.ஜே. ஆபிரகாம் வருதாகக் கேள்விப்பட்டேன். எப்படியாகிலும் அவரைச் சந்தித்துவிடவேண்டும் என விரும்பினேன்; என்றாலும், பெற்றோர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பார்களா? என்ற கேள்வி என் தொண்டையை நெருக்கியது. இருந்தபோதிலும், எனது தாயாரிடம் அனுமதி கேட்டேன், முதலில் வேண்டாம் என்று தட்டிக்கழித்தவர்கள், நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருந்தினால், சரி போய்ட்டுவா என்று அனுமதி தந்தார்கள். போதகர் சாலமோன் வீட்டில், கூட்டம் நடைபெறும் அறையில் ஒரு புறத்தில் சுவற்றில் சாய்ந்தவனாக உட்கார்ந்திருந்தேன். அவ்வப்போது, தாத்தாவையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன், இவர் மூலமாக ஏதாவது ஒரு விடுதலை வந்துவிடாதா? என ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய சரீர நிலையினைக் குறித்து, போதகர் கே.ஜே. ஆபிரகாமுக்கு போதகர் சாலமோன் ஏற்கனவே எடுத்துச் சொல்லியிருந்தார். 

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, திடீரென போதகர் கே.ஜே. ஆபிரகாம் என்னை நோக்கி, ஒரு வேத பகுதியைச் சொல்லி வாசிக்கச் சொல்ல, நானோ, திக்கித் திக்கித், திணறித் திணறி வாசிக்கத் தொடங்கினேன்; அப்போது எனக்கு இருந்த பெலன் அவ்வளவுதான். கூட்டம் முடிந்ததும், என்னை அழைத்து ஜெபித்த போதர் கே.ஜே. ஆபிரகாம் 'உனக்கு ஒன்னுமில்ல' என்று சொல்லி அனுப்பிவிட்டார். எவ்வளவு கஷ்டப்படுகிறேன், இப்படி ஒன்னுமில்லன்னு சொல்லிட்டாரே என்று ஒருபுறம் நான் நினைத்துக்கொண்டாலும், பதில் ஏதும் சொல்லாமல் வீட்டை வந்தடைந்தேன். 

சில நாட்கள் சென்றது, ஒரு நாள் நான் படுத்திருக்கும்போது, ஆண்டவரே! எனக்கு ஏன் இந்த நிலை? இதுவரைக்கும் நான் உம்மிடம் எத்தனையோ முறை ஜெபத்தில் பேசியிருக்கிறேன்; இப்போதாவது நீர் வந்து என்னிடத்தில் பேசக்கூடாதா? என்ற கேள்விகளையே தேவனுக்கு முன் வைத்துக்கொண்டிருந்தேன். திடீரென யாரோ தனது கைகளை எனது வயிற்றின் மீது வைப்பதைப் போன்று உணர்ந்து கண் விழித்து எழுந்தேன், எனது வயிற்றின் மீது இரண்டு கரங்கள் வைக்கப்பட்டிருந்தன, அது சொப்பனமும் அல்ல தரிசனமும் அல்ல, நேரடிக் காட்சி என்பதை எனது கண்களால் உறுதிசெய்துகொண்டேன். அந்தக் கைகள் என் மீது வைக்கப்பட்டதும், எனக்குள் பெலன் உண்டானது, எழுந்தேன், நடந்தேன், எல்லாவற்றையும் செய்யத் தொடங்கினேன், திடீரென என்னில் காணப்பட்ட இந்த மாற்றத்தினால் வீட்டார் சற்று யோசித்தாலும், குடும்பம் மகிழ்ச்சியடைந்தது. 


Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை