சிறுவயதில், சகோ. தினகரன் அவர்களது கூட்டங்களில் அதிகம் கலந்துகொண்டதினாலும், அவரது பழைமையான பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உண்டாயிருந்தது. இத்தனை பெரிய மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்க, சற்று பொறுத்திருங்கள் என்று என்னை இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.
சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச் சென்றார். அறையின் கதவினைத் திறக்காமல், சாத்தப்பட்டிருந்த கதவிற்கு வெளியிலேயே என்னை விட்டுவிட்டு உள்ளே சென்று சகோதரரைச் சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது? என்னை அவருக்கு எப்படித் தெரியும்? என்ன பேசுவது? போன்ற சில கேள்விகள் என்னைச் சுற்றிக்கொண்டிருந்தன. அதுதான் நான் முதல் முறையாக தனியாக அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நேரம். எனவே, அந்த ஊழியர் அறையினுள் வந்து சகோதரர் தினகரனிடம் என்னை அறிமுகப்படுத்திச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக்கொண்டிருந்த நான், மெல்ல அறைக் கதவினைத் திறந்தேன், அறையில் எந்தப் பக்கம் அமர்ந்திருப்பார்? என்ற எண்ணத்தோடு, தலையினை உள்ளே நுழைத்துப் பார்த்தபோது, அறையினுள் இருந்த சகோதரர் தினகரன், வயதான நிலையிலும், இருக்கையிலிருந்து மெல்ல எழுந்தவண்ணம், இரு கரங்களையும் கூப்பியவாறு 'ஸ்தோத்திரம் தம்பி' என்று சிரித்த முகத்துடன் வரவேற்றார்; பின்னதாகவே நான் 'ஸ்தோத்திரம்' என்று சொன்னவாறு அவரை ஏறிட்டுப் பார்த்தேன்; முதலில் நான் அல்லவா சொல்லியிருக்கவேண்டும், இத்தனை வயதானவராக, பெலவீனமுள்ளவராக இருந்தபோதிலும் இருக்கையிலிருந்து அவர் எழும்பவேண்டியது அவசியமா? என்று அவர் முந்திக் கொண்ட காரியங்களைக் குறித்து என் மனம் சிந்திக்கத் தொடங்கியது. அவரைத் தவிர அறையில் வேறு யாரும் இல்லை. முதன் முதலாக அறையில் நேரடியாகப் பார்த்த அனுபவத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லாதவனைப் போல, அருகில் சென்று முழங்கால் படியிட்டு ஜெபித்துவிட்டு, திரும்பி வந்தேன். இரண்டு முறை அறையில் அவரை தனியே சந்தித்தபோதும் முந்திக்கொண்டவது அவரே. கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். (ரோம 12:10) என்ற சத்தியத்தை அவருடனான சந்திப்பு எனக்குக் கற்றுக்கொடுத்தது.
மற்றொருமுறை, சென்னை மெரீனா கடற்கரையில் 'இயேசு அழைக்கிறார்' கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அன்றைய நாட்களில் நிலவிய சூழ்நிலையின் நிமித்தமாக, காவல்துறை பாதுகாப்பு வாகனங்களுடன் ஒவ்வொரு நாளும் கூட்டத்தி;ற்கு வந்தார் சகோதரர் தினகரன். எல்லா கூட்டங்களிலும் தவறாது சென்றுவந்தேன். கடைசி நாள் கூட்டம் முடிந்ததும், மேடையிலிருந்து அவர் புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். அவரது வாகனம் மேடைக்கு அருகே கொண்டுவரப்பட்டது. மேடையிலிருந்த ஊழியர்களுடன் பேசிவிட்டு, உதவியாளர்களின் உதவியுடன் மேடையை விட்டு இறங்கிக்கொண்டிருந்தார். சகோதரருக்கு எப்படியாவது கைகொடுத்துவிடவேண்டும் என்ற ஆசையில் மேடைக்கு அடியில், அவரது வாகனத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்தேன். என்றபோதிலும், சகோதரர் வாகனத்தில் ஏறும்போது, அவரைச் சந்திக்க விடாமல் காவல்துறையினர் மறித்துக்கொண்டனர். வாகனத்தில் ஏறிய சகோதரர், அருகில் நின்றுகொண்டிருந்த அநேகரைப் பார்த்து கையசைத்துக்கொண்டிருந்தார். கதவு அடைக்கப்பட்டு, வாகனம் புறப்பட்டு சுமார் பத்து அடி தூரம் மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. வாகனத்தின் உள்ளே சகோதரர் அமர்ந்திருந்தது கூட எனது கண்களுக்குத் தென்படவில்லை, வாகனத்துடன் நானும் கையசைத்தவாறு மெல்ல நடந்துகொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தின் கண்ணாடி கீழே இறங்கியது சகோதரர் கரத்தை நீட்டினார், ஓடிச் சென்று அவருக்குக் கைகொடுத்தேன். சில விநாடிகளில் வாகனம் வேகமாகச் சென்றது. அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட காவல்துறையினர், ஓடிவந்து என்னை இழுத்தனர், கண்டித்தனர்; நீங்கள் யார்? என்று கேட்டவாறு, இப்படிச் செய்யக்கூடாது என்று கடிந்துகொண்டனர். நான் அல்ல, சகோதரர்தான் கண்ணாடியை கீழே இறக்கி கைகொடுத்தார் என்று காவல்துறையினரிடம் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். பலத்த பாதுகாப்பின் மத்தியிலும், தானே கரம் நீட்டினதினாலேயே அன்று அச்சந்திப்பு சாத்தியமாயிற்று என்பது இன்றும் என் நினைவில் நிற்கும் நிகழ்வு.
கருத்துகள்
கருத்துரையிடுக