சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
அண்ணே! உங்க கூட ஒரு படம்
சென்னையைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் ஜெம்ஸ் ஊழியங்களையும், பணித்தளங்களையும் பார்வையிடும்படியாக பீஹார் வருகைதந்திருந்தனர். பணித்தளங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, குழுவாக ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலுள்ள ஜெம்ஸ் வளாகத்திற்கு வருகை தந்தனர். சிக்காரியா பணித்தள ஊழிய அலுவலகங்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்வையிட்ட அவர்கள், ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தினுள் நின்றுகொண்டிருந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அக்குழுவில் பெண்களே அதிகம் காணப்பட்டனர். ஊழியங்களைக் குறித்து பரஸ்பரம் பேசி முடித்த பின்னர், சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். அப்போது, நானும் ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தின் உள்ளே அவர்கள் அருகிலே நின்றுகொண்டிருந்தேன். குழுவிலிருந்த தாயார் ஒருவர், புகைப்படம் எடுக்கும்படி தனது கேமராவை என்னிடத்தில் நீட்டினார். அப்போது நான், அந்த தாயாரிடம்: 'அம்மா, உங்களிடம் இருக்கின்ற கேமராவினை விட என்னிடம் இருக்கின்ற இந்தக் கேமராவில் எடுத்தால் மிக நன்றாக இருக்கும், எனவே. என்னுடைய கேமராவிலேயே எடுத்து அதனை உங்களுக்கு அனுப்பித் தருகிறேன்' என்று சொல்லி, அவருடைய கேமராவை வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். எல்லோரும் நின்று நான் புகைப்படம் எடுத்து முடிந்த பின்னர், அந்தத் தாயார் தானே வந்து, தனது கேமராவில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைக் கண்டபோது, நான் எனது தவற்றினை உணர்ந்தேன், அந்தத் தாயின் விருப்பப்படி அவருடைய கேமராவிலும் ஒரு படம் எடுத்துக்கொடுத்திருக்கலாமே என்று நினைத்தேன். நான் படமெடுத்து முடிந்ததும், அனைவரும் கலைந்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர். அப்போது அதே தாயார் சகோதரரிடத்தில் வந்து, 'அண்ணன், உங்களோடு கூட ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்' என்று சொன்னார். சகோதரரோ, 'பெண்கள் யாருடனும் நான் தனியாக நின்று படம் எடுக்கிறதில்லை, இது எனது வழக்கம்' என்று திட்டமாகச் சொன்னார். என்றபோதிலும், அந்தத் தாயார் தொடர்ந்து சகோதரரைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்; நரைத்த முடியுடன் இருந்த அந்தத் தாயின் விருப்பத்தைக் கண்ட சகோதரர் சற்று தளர்ந்தார், அந்தத் தாயின் விருப்பப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்தார்; அந்தப் படத்தினை அந்தத் தாயாருடைய கேமராவில் நானே எடுத்தேன். இறுக்கமாக இருந்தபோதிலும், இளகிய சகோதரரைக் கண்டபோது, என் செயல் என் நினைவை வாட்டியது. பிறரது விருப்பத்தை ஏற்கும் சகோதரரின் மனநிலைகூட என்னிடம் இல்லாமல் போய்விட்டதே என்று அன்று மனம் வருந்தினேன்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக