சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
‘Nobody knows the foundation’
ஒரு நாள் காலை வேளை, முதல் மாடியில் அமைந்திருந்த எனது அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தேன். திடீரென எனது அலுவலகத்தின் வாசலண்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிற சத்தம் கேட்டது, எனது அலுவலகத்தின் வாசலில் நின்றவாறு வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், வெளிநாட்டைச் சேர்ந்த ஜெபப் பங்காளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். ஜெம்ஸ் உருவான வரலாற்றையும், கட்டடங்கள் கட்டப்பட்ட விதத்தையும் சகோதரர் அவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். ஜெபப் பங்காளரின் பல கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென சத்தத்தை உயர்த்தியவாறு, ‘Nobody knows the foundation’ என்று சொன்னார் சகோதரர். இந்த வார்த்தை எனது உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதிந்தது. சற்று நேரத்திற்குள் அந்த ஜெபப் பங்காளரை எனது அலுவலகத்திற்குள்ளும் அழைத்து வந்து, எனது அலுவலகத்தின் பணிகள் பற்றியும், என்னைப் பற்றியும் அந்த ஜெபப் பங்காளருக்கு அறிமுகம் செய்துவைத்தார் சகோதரர். அவ்விருவரும் எனது அறையை விட்டுக் கடந்து சென்ற பின்னரும், ‘Nobody knows the foundation’ என்று சகோதரர் சொன்ன வார்த்தை எனது செவிகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. சகோதரர் இப்படிச் சொன்னதின் காரணம் என்ன? எதனைக் குறிப்பிட்டு இப்படிச் சொன்னார்? நிச்சயம் ஜெம்ஸ் வரலாற்றைக் குறித்துத்தான் என்பதை யோசித்தவனாகவே என்னுடைய அலுவல்களை அன்றைய தினம் தொடர்ந்தேன். பின்னர் சகோதரரைச் சந்தித்த நான், அண்ணன் நீங்கள்‘ Nobody knows the foundation’ என்ற வார்த்தையை நான் கேட்டேன். ஜெம்ஸ் வரலாறு குறித்து நிச்சயம் நீங்கள் ஒரு புத்தகம் எழுதவேண்டும், இல்லையெனில், எங்களைப் போன்ற புதிய முகங்களுக்கு ஜெம்ஸ்-ன் தொடக்க முகம் தெரியாமலேயே போய்விடும் என்றேன். எனது வார்த்தைகளை உள்வாங்கிய சகோதரர், 'ஜெம்ஸ் வரலாறு எழுதவேண்டும் என்ற விருப்பம் எனக்குள்ளும் இருக்கின்றது, அதற்கான நேரம் கிடைக்கவேண்டும், ஜெபியுங்கள்' என்று பதிலுரைத்தார். சில மாதங்களுக்குப் பின்னர், வெளிநாடு சென்றிருந்த சகோதரர், அங்கேயே முழு புத்தகத்தையும் கைப்பட எழுதி முடித்து, பீஹார் திரும்பியபோது என் கையில் கொடுத்தார். அதுவே, 'நீ இல்லாவிடில்' என்ற தலைப்பில் வெளிவந்த ஜெம்ஸ் வரலாறு. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குப் பின்னர் அவரது அலுவலகத்தில் அந்தப் புத்தகத்தின் பணியை அவருடன் இணைந்து செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, புத்தகத்தில் பதித்திராத பலகாரியங்களையும், நிகழ்வுகளையும் சகோதரர் என்னுடன் பகிர்ந்துகொண்டது எனக்குக் கிடைத்த பாக்கியம். வரும் தலைமுறையினர் நம் வளர்ச்சியை மட்டுமல்ல, நம் விதையையும் காணவேண்டும்.
நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.(ஏசா 51:1)
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக