சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
வியாதியுள்ளவங்கய்யா,
தொந்தரவு செய்யாதீங்க
ஒருமுறை, அலுவலகப் பணியின் நிமித்தம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைச் சந்திக்கும்படியாக நானும், ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை அவர்களும் சென்றிருந்தோம். அந்நாட்களில், நான் ஜெம்ஸ் வாகனத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்; அத்துறையின் பொறுப்பாளராக சகோதரர் ராஜதுரை பணிசெய்துகொண்டிருந்தார். சகோதரரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சில அலுவலகக் காரியங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சில விஷயங்களில் பாட்னாவில் இருந்த ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை தொடர்புகொள்ளவேண்டிய சூழ்நிலை உண்டானது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையினிடம், சகோதரர் E.C.ஜான்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி, தனது நேர்முக உதவியாளர் சகோதரி ஷீலா டத்தியிடம் சொல்லச் சொன்னார். சகோதரி ஷீலா டத்தி பலமுறை E.C.ஜான்சன் அவர்களுக்குப் போன் செய்துகொண்டேயிருந்தார், ஆனால், வீட்டிலோ தொலைபேசியினை யாரும் எடுக்கவில்லை. 'அண்ணன், E.C.ஜான்சன் வீட்ல யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை' என்ற தகவலை சகோதரர் ராஜதுரை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அலுவலகக் காரியங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். இடையில், மீண்டும் சகோதரி ஷீலா டத்தி அவரைத் தொடர்பு கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த ஒருவர் தொலைபேசியினை எடுத்தவாறு, 'அண்ணன், தூங்கிக்கொண்டிருக்கிறார்' என்று பதில் சொன்னதாகச் சகோதரி சொன்னார். இதனைக் கேட்ட சகோதரர் ராஜதுரை 'அகஸ்டின் அண்ணன் கூப்பிடுகிறார்னு சொல்லுங்க' என்று சொல்லியவாறு சகோதரரின் அறையிலிருந்து வெளியே சென்று சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைக்கச் சென்றார். அப்போது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையை நோக்கி: 'அவங்கல்லாம் வியாதியுள்ளவங்கய்யா, தூங்கட்டும், தொந்தரவு செய்யாதீங்க' என்றார். தான் அழைத்தும் அவர் எழும்பவில்லையே என்ற கோபம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் முகத்தில் காணப்படாததை அப்போது நான் கண்டேன். அவசரமான காரியமாயிருந்தபோதிலும், வியாதியுள்ளவர்கள் மேல் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கு இருந்த கரிசனை அப்போது எனக்குத் தெரிந்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக