சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
வேடன்
6 April 2014
தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியளிக்கும் மூன்று நாட்கள் சுவிசேஷக் கூட்டங்கள் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. அது மே மாதம், நான் வருடாந்தர விடுமுறைக்காக குடும்பத்தோடு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊரான சாயர்புரத்தில் இருந்தேன். சகோதரரின் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்ற ஆவலோடிருந்த என் மனதில், அக்கூட்டங்களில் அவர் அளிக்கும் செய்திளை உலகெங்கும் இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் உண்டானது. முதல் நாள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன், சகோதரரின் செய்தியை ஒளிபரப்புவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் காரிலேயே செய்துவைத்திருந்தேன். இன்டெர்நெட் வசதி, கணணி மற்றும் ஒளிபரப்புவதற்குத் தேவையான அத்தனை உபகரணங்களும் காரிலேயே ஆயத்த நிலையில் இருந்தன. பாளையங்கோட்டையில் கூட்டம் நடக்கும் மைதானத்திற்குச் சென்றடைந்தேன். மேடையின் வலது புறத்தில் ஒளிபரப்பத் தேவையான தூரத்தில் காரை நான் நிறுத்தினேன். நான் யார் என்றும் எதற்காக அப்பகுதியில் காரை நிறுத்துகிறேன் என்பதையும் அறியாத சிலர் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தச் சொன்னபோது, நான் ஜெம்ஸ் மிஷனரி என்றும், சகோதரரின் செய்தியை நான் ஒளிபரப்பவேண்டும் என்ற விபரத்தையும் எடுத்துரைத்தேன். சிங்கப்பூரில் இருந்த சகோதரர்கள் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியைக் கேட்க ஆயத்தமாயிருந்தனர்; அவ்வப்போது தொலைபேசியிலும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வாகனம் மைதானத்தில் நுழைந்தது. சகோதரரின் வாகனத்தைக் கண்டதும் விரைந்து ஓடினேன். 'அண்ணன் உங்கள் செய்தியை இன்று இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பப்போகிறேன்' என்று சொன்னேன். சற்று நேரம் யோசித்த சகோதரர், 'கிருபா, நான் பாளையங்கோட்டையில் உள்ள சகோதரர்களுக்கென்று பேசுவேன், அதனை மற்றவர்கள் கேட்டால், புரிந்துகொள்ளமுடியுமா? என்றார். அடுத்த நாள் காலையில், சகோதரரை தூத்துக்குடியில் அவரது இல்லத்தில் சந்தித்தபோதும், இதே பதில்தான் எனக்குக் கிடைத்தது. எனது வேகத்தை அவரது விவேகம் தணித்தது, இந்த வேடன் எந்தக் குருவியை குறி வைக்கிறான் என்று அப்போது எனக்குப் புரிந்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக