சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
பெரிய அற்புதம்
2005-ம் ஆண்டு, நான் ஜெம்ஸ் வெளியீட்டுத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில், வெளிநாட்டு ஊழியர் ஒருவருடைய கூட்டங்கள் தென்னிந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த வெளிநாட்டு ஊழியரைக் குறித்து நான் ஆங்காகாங்கே ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்; மிகப் பிரபலமான பிரசங்கி என்றும், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்குபெறுவார்கள் என்றும் நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1996-ம் ஆண்டு நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், அவர் எழுதிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கின்றேன். இந்தியாவில் நடைபெற்ற அவரது எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தில்லை; எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டிகளையும், செய்திகளையும் கேட்டிருக்கிறேன். 2005-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் அவரது கூட்டங்கள் நடைபெறவிருப்பதை நான் அறிந்தபோது, அதனைக் குறித்த விபரங்களையும் அறிந்துகொள்ள அதிக ஆசையாயிருந்தேன். பல தினசரி பத்திரிக்கைகள் அவரது கூட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. அப்பொழுது, ஜெம்ஸ் ஊழியர்கள் மூலமாக சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அக்கூட்டத்தில் ஒருமுறை கலந்துகொண்டதாக அறிந்தேன். எனவே, சகோதரர் பீஹாருக்கு வந்ததும், அக்கூட்டத்தைப் பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினேன். தமிழகத்தில் தனது கூட்டங்களை முடித்துவிட்டு பீஹார் திரும்பிய சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடத்தில், 'அண்ணன், அந்த வெளிநாட்டு ஊழியரின் கூட்டங்கள் எப்படியிருந்தன?' என்று கேட்டேன். அநேகர் வந்திருந்தார்கள், அநேகர் வியாதியிலிருந்து சுகமானார்கள்... என்று கூட்டத்தைப் பற்றிய சில காரியங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சகோதரர், 'ஆனால், கிறிஸ்துவின் சுவிசேஷம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படவில்லை' என்று சொன்னார். ஜனங்கள் அற்புதங்களைப் பெறுவதைக் காட்டிலும், அவரை (இயேசுவை) அறிந்துகொள்வதுதானே பெரிய அற்புதம் என்று சகோதரர் என்னிடத்தில் சொன்னபோது, எனது கண்களும் பெரிய அற்புதத்தை நோக்கியே திரும்பின.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக