சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
'We are insulated by God'
அது ஒரு காலை வேளை; மீடியா துறையில் உள்ள தனது அலுவலகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் வேலையில் அமர்ந்திருந்த எனது மனதில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுடன் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சற்று பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இருக்கையிலிருந்து எழுந்து சகோதரரின் அறையில் யாராவது உடன் இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தேன். எவருமில்லாத அந்த நேரத்தை எனதுடையதாக்கிக்கொள்ள, விரைந்து அவரது அறைக்குள் நுழைந்தேன், 'அண்ணன் ஐந்து நிமிடம், பேசலாமா' என்றேன்; உட்காருங்கள் என்றார். அண்ணன் நான் பேச விரும்புவது அலுவலகக் காரியங்களைப் பற்றியதல்ல என்ற முன்வரியுடன் தொடங்கினேன். அலுவலக சூழலைச் சற்று துறந்து, ஆவிக்குரிய ரகசியங்களைத் அவரிடத்தில் துளையிட்டு எடுக்கும் எண்ணத்தில் பேசத்தொடங்கினேன். சில கேள்விகளைக் கேட்டு விடைக்குக் காத்திருந்தபோது, அவரது வாயிலிருந்து வாழ்க்கைக்கான ரகசியங்கள் பல வலம் வந்தன. எதிர்மறை காரியங்களை, எதிருக்கு எதிரே, புதிரைப்போலச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் ஆவிக்குரிய மனிதனின் மனதில் எத்தனையோ புலம்பும்படியான கேள்விகள் எழுகின்றதே இதற்குக் காரணம் என்ன? இவைகளைச் சந்திப்பது எப்படி? என்றேன். அதற்கு அவர் : கிருபா, 'we are insulated by God' என்றார். இரண்டு மின்சார ஒயர்களை இணைத்து அதன்மேல் அவருடைய பாதுகாப்பு என்னும் insulation tape சுற்றப்பட்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையே மின்சாரத்தைப் போல வல்லமை பாய்ந்துகொண்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையிலான பிணைப்பு பெலமுள்ளது; சத்துருவினால் எளிதில் பிரித்துவிடவோ, பெயர்த்துவிடவோ கூடாதது. தேவனை விட்டுப் பிரியாமல் அனுதினமும் அவரோடு இணைந்த வாழ்க்கை நாம் வாழுவோமென்றால், நம்முடைய insulation tape – ஐ பிரித்தால், சத்துருவின் வாழ்க்கைதான் பாதிக்கப்படும். தேவனோடு நமக்குத் தொடர்பு இருக்குமென்றால், சத்துருவின் தொடருதலைக் குறித்து கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. தேவனோடு தொடர்பில்லாமலிருப்போமென்றால், சத்துருவின் தொடருதலினால் கவலை கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்ற அவரிடமிருந்து வந்த இந்த வார்த்தையை மாத்திரையாக உட்கொண்டு, மகிழ்வுடன் அவரது அறையை விட்டு வெளியே வந்தேன். அன்று முதல், சத்துருவையல்ல, தேவன் என்மேல் வைத்திருக்கும் பாதுகாப்பைப் பார்க்கத் தொடங்கினேன்.
www.sinegithan.in
Comments
Post a Comment