சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க
சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுதுகொண்டிருந்தனர். வசனத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததால், அவர்கள் வாழ்க்கையில் உண்டான விளைவு என நான் நினைத்து கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தேன். முதல் நாள் கூட்டம் முடிந்ததும் சகோதரரைச் சந்தித்த நான், 'அண்ணன், பலர் மேடைக்கு முன் வசனத்தைக் கேட்டு ஒப்புக்கொடுத்தவர்களாக அழுதுகொண்டிருந்தார்களே' என்று சொன்னேன். சகோதரரோ என்னிடத்தில், 'கிருபா, நீங்கள் நினைக்கிறது தவறு, ஏமாந்துவிட்டீர்கள், தொடர்ந்து நடைபெறும் இரண்டு நாட்களிலும் அந்த அழும் மக்களை நீங்கள் கவனியுங்கள்' என்று சொன்னார். இறுதி நாள் கூட்டம் தொடங்கியது; சகோதரர் வசனத்தைப் பிரசங்கித்துவிட்டு, இறுதி ஜெபத்தை நடத்திக்கொண்ருந்தபோது, மேடைக்கு முன் இருந்தவர்கள் அசுத்த ஆவி பிடித்தவர்களைப் போல ஆடத் தொடங்கினர், தரையில் விழுந்து புரளத் தொடங்கினர். மேடையிலிருந்து சகோதரர் கீழே இறங்கி வந்து அவர்களுக்காக ஜெபித்தபோது, அசுத்த ஆவியினின்று விடுதலை பெற்றனர். அந்தக் கூட்டத்தின் முடிவில் வெளிப்புறத்தைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்ற பாடத்தை சகோதரரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக