சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
இடி இப்பவே ரெடி
2014, ஜுலை 2 அன்று காலை சுமார் பதினோரு மணி; அலுவலகத்தில் நான் எனது பணியிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவரது அறையில் பணியிலுமாக அமர்ந்துகொண்டிருந்தோம். மீடியா துறையின் சக ஊழியர்கள் தத்தம் பணியினை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அலுவலகப் பணியினிமித்தம் நான் சகோதரரைச் சந்திக்கச் சென்றேன். சந்திப்பு முடிந்ததும், ஆவிக்குரிய வாழ்க்கையின் சில காரியங்களைக் குறித்து சகோதரரோடு உரையாடிக்கொண்டிருந்த நான், 2013-ம் ஆண்டு, உடுமலைப்பேட்டையில், மிஷனரி தரிசன ஐக்கிய ஆராதனையில் சகோதரர் அளித்த 'உண்மை சபை' என்ற செய்தியைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். youtube இணையதளத்தில் https://www.youtube.com/watch?v=vka5_ffQfkA என்ற வலைய முகவரியில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் செய்தியினை அன்றுவரை 26,092 பேர் கேட்டிருந்தனர். அப்பொழுது சகோதரர், 'சென்ற ஞாயிற்றுக் கிழமை (29 ஜுன் 2014) பீஹார் ஆலயத்தில் தான் அளித்த செய்தி, அந்நேரத்தில் ஆண்டவரால் அருளப்பட்டது' என்று சொன்னார்; தொடர்ந்து, '2015-ம் ஆண்டு, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியும் எனக்குக் கிடைத்துவிட்டது' என்று சொன்னார். எனக்கோ வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு, முன்னதாக இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டாரே சகோதரர் என்று எண்ணியவாறு, சகோதரரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நான், 'அண்ணன், அது எப்படி சாத்தியமாகிறது?' இடையில் இன்னும் எத்தனையோ கூட்டங்கள் இருக்கின்றனவே. ஆறு மாதங்களுக்குள்ளாக இன்னும் எத்தனையோ இடங்களில் நீங்கள் பிரசங்கிக்கவேண்டியதிருக்கிறதே, அப்படியிருக்க, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியை இப்பொழுதே எப்படி பெற்றுக்கொண்டீர்கள் அடையாளங் கண்டுகொண்டீர்கள்? நானாக இருந்தால், கூட்டம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர்தான் செய்தியை தேவனிடத்தில் கேட்டிருப்பேன் என்று சொன்னேன். அப்பொழுது சகோதரர், 'கர்த்தர், எனக்குக் கொடுத்த அந்தச் செய்தி சென்னைக் கூட்டத்திற்கானது' என்று தான் அறிந்துகொண்டதாகச் சொன்னார். என் மனதில் எழுந்த வார்த்தைகளை மீண்டும் அவரிடத்தில் கேள்வியாக்கினேன். 'அண்ணன், நீங்கள் 2015-ஜனவரி சென்னை கூட்டத்திற்காக இப்பொழுதே ஜெபிக்கத் தொடங்கிவிட்டீர்களா' என்றேன்; சிரித்த முகத்துடன் 'ஆம்' என்ற பதில் வந்தது. 2015, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான மழை மறுவருடம் பெய்யப்போகிறது, ஆனால், இடி இப்பவே ரெடி என்று என் மனது என்னிடத்திலேயே சொல்லிக்கொள்ள, அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆயத்தத்தைக் கண்டு சற்று அதிர்ந்தவனாக அலுவலகப் பணியினைத் தொடர்ந்தேன். அந்நேரத்தில் தரப்பட்டாலும், முந்நேரத்தில் தரப்பட்டாலும், எந்நேரத்தில் தரப்பட்டாலும் எந்தச் செய்தி யாருக்கு என்று அடையாளம் கண்டுகொண்டால் மாத்திரமே, உரிய கூட்டத்தாருக்கு அதனை உரித்தாக்க முடியும்; ஏதோ, ஆயத்மாயிருக்கும் செய்தியை யாருக்கோ பிரசங்கிப்பது பொருத்தமானது அல்ல என்பது அப்போது நான் கற்ற பாடம்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக