சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
சரியான இடம், சரியான ஊழியன்
2002-ம் ஆண்டு நான் பீஹாரில் ஜெம்ஸ் ஊழியத்தில் இணைந்தேன். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை கருவந்தியா பவணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஊழியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். வாலிபர்கள் மத்தியில் பணிபுரிவது எனக்கு விருப்பமான அழைப்பு என்பதால், தொழிற்பயிற்சி மையத்தின் மாணவர்களை பணித்தளத்தின் ஆத்துமாக்களாகக் கருதி எனது பணியினைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். 2004-ம் ஆண்டு எனக்குத் திருமணம் ஆனது. திருமணம் முடிந்து மனைவியுடன் நான் தூத்துக்குடியிலிருந்து பீஹார் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்ட சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், 'தம்பி, நீங்க சிக்காரியா பணித்தளத்திலேயே இறங்கிவிடுங்கள்' என்று சொன்னார். 'சரி அண்ணன்' என்ற பதிலுடன், டெஹ்ரி ஆன் சோன் ரயில் நிலையத்தில் இறங்கி, மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினருடன் சிக்காரியா பணித்தளத்திற்கு வந்து சேர்ந்தேன். ஓரிரு நாட்கள், விருந்தினர் விடுதியிலேயே தங்கியிருந்தேன். அப்போது என்னைச் சந்தித்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் 'கிருபா, உங்களை ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன், உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்டார். நானோ பொறியியல் பயின்றவன், எனினும் சகோதரரிடம், 'அண்ணன், 'உங்களது விருப்பமே, எனது விருப்பம்' என்று பதில் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டேன். எனது மனைவி ஜெம்ஸ் ஆங்கிலப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டாள். ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டபோது, சகோ.பிரைட் கென்னடி மீடியா துறையின் மீடியா துறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். சகோ.ஞானராஜ், சகோ பெல்ஷாத், சகோ.பிரபாகரன் ஆகியோர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். துறையில் புலம் பெற்ற இத்தகையோருடன் இணைந்து ஓடுவது எனக்கு எப்படி சாத்தியமாகுமோ என்ற கலக்கம் எனக்கு தொடக்கத்தில் உண்டானது. தொடர்ந்து வந்த நாட்களில், மேற்கண்ட அனைவரும் வெவ்வேறு பணித்தளத்திற்கு மாறுதலாகிச் சென்றதால், ஜெம்ஸ் வெளியீட்டுத் துறை ஒருங்கிணைப்பாளராக நான் பணியில் அமர்த்தப்பட்டேன். அன்று முதல் எனக்குள் இருந்த எழுத்து தாலந்து மேலும் கர்த்தரால் வளர்க்கப்பட்டதை அறிந்தேன். எங்கும் சென்று தட்டச்சு பயிலாத எனது விரல்களை யுத்தத்திற்குப் பழக்குவித்தார் தேவன். எழுதிக்கொண்டிருந்த என்னை எழுத்தாளனாகவே மாற்றியது இந்த பணிமாற்றமே. சரியான இடத்தில், சரியான ஊழியரைப் பணியில் அமர்த்துபவராக சகோதரரைப் புரிந்துகொண்டேன்.
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.(சங் 144:1)
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக