சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
எதிரியின் ஏவுகணை
சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவரது அலுவலகத்தில், அலுவலகப் பணியின் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றிருந்தேன். அது ஒரு மாலைப் பொழுது, சகோதரர் இருக்கையில் அமர்ந்தவாறு, தனக்கு வந்திருந்த கடிதங்களைப் வாசித்துக்கொண்டிருந்தார். எதிர் இருக்கையில் என்னை அமரச் சொல்லிய அவர், எனது வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டு இடையிடையே தனக்கு வந்த கடிதங்களையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும், தானே வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அவர். சில கடிதங்களை தனது உதவியாளரை அழைத்து, அவைகளுக்குப் பதில் எழுதும்படிச் சொன்னார். சில கடிதங்களின் மேல் குறிப்புகளை எழுதியவாறு தனது மேஜையிலேயே ஒரு முனையில் வைத்தார்; என்னுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். அப்பொழுது, ஒரு கடிதத்தை கையிலெடுத்த அவர், அதனை அப்படியே பார்த்துவிட்டு கிழித்துப் போட்டார். இதனைக் கண்ட நான், 'அண்ணன், அந்தக் கடிதத்தை இவ்வளவு சீக்கிரத்தில் வாசித்து முடித்துவிட்டீர்களா, உடனே ஏன் கிழித்துப்போட்டுவிட்டீர்கள்' என்று கேட்டேன். அதற்கு சகோதரர், இந்தக் கடிதம் எனது மனதைக் கெடுத்துவிடும். இந்த மனிதருக்கு என்னைத் திட்டி கெட்ட கெட்ட வார்த்தைகளினால் கடிதம் எழுதுவதே வழக்கமாகிவிட்டது. கடிதத்தைப் பார்த்தவுடன் அவர் என்ன எழுதியிருப்பார் என்று எனக்குத் தெரியும். வைராக்கியமாய் பிரசங்கிக்கும் என்னைத் திட்டி கெட்ட வார்த்தைகளால் விமர்சித்தே தொடர்ந்து கடிதங்களை எழுதுகின்றார். என் பிரசங்கத்தைக் குறித்தோ, ஊழியத்தைக் குறித்தோ விமர்சித்து எழுதினால் வாசிக்கலாம்; ஆனால், அசிங்கமான கெட்ட வார்த்தைகளை எழுதுவதால் அதனை வாசிக்க நான் விரும்புவதில்லை. இந்தக் கடிதத்தை வைத்திருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தாலோ, வாசித்துக்கொண்டிருந்தாலோ எனது சிந்தனை திசை திரும்பிவிடும், அவரது கடிதம் எனது மனதில் பதிந்துவிடும். அது என் மனதை விட்டு நீங்குவதற்கு ஆறு முதல் ஒரு வருடங்கள் ஆகும். கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கிக்கும் நான், இத்தகைய கடிதங்களால் என் இருதயத்தைக் கறைபடுத்த விரும்பவில்லை. அக்கடிதத்தை வேறு யாராவது வாசித்தாலும், அவர்களது மனதில் அது பதிந்துவிடும். எனவே, நானே அதனைக் கிழித்துப்போட்டுவிடுவேன் என்றார். சுவிசேஷத்தின் வசனத்தைச் சுமந்து செல்லும் மிஷனரியின் மனம், எதிரியின் ஏவுகணைகளைச் சுமந்து கறைபடக்கூடாது என்பது ஓர் நல்ல செய்தி.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக