சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
சரியாத மரம்
.அது ஓர் காலை வேளை, 9.30 மணி; அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைச் சந்திக்கும்படியாக அவரது இல்லத்தினை நோக்கிச் சென்றேன். வீட்டின் வெளியே காலணிகளைக் கழற்றிவிட்டு, முன் அறையினுள் நுழைந்தேன்; முன் அறையின் இருக்கைகள் அனைத்தும் எவரும் இல்லாமல் காலியாயிருந்தது; இதனைக் கண்டதும், சகோதரரின் வீட்டில் யாரும் இல்லையோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்பியது; அதனைத் தொடர்ந்து, அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு அப்புறம் சகோதரரைச் சந்தித்துக்கொள்ளலாம் என்ற நினைவும் எனக்குள் உருவானது.
என்றாலும், சகோதரரைச் சந்திக்கும் ஆர்வத்தில், அடுத்த அறையினை நோக்கி நகர்ந்தேன். அங்கோ, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் துணைவியார் சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் அமர்ந்திருந்தார்; அவர்களைக் கண்டதும், 'அக்கா, அண்ணன் இருக்காங்களா?' என்று கேட்டேன். அந்த ரூம்ல இருக்காங்க, ஜெபம் பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்' என்றார்? தயங்கியபடி நின்றுகொண்டிருந்த என்னைக் கண்டதும், சகோதரர் இருக்கும் அறையினை நோக்கி விரல் நீட்டியாவறு, அந்த அறையில்தான் அண்ணன் இருக்கிறார்கள் என்றார் சகோதரி ரூபலேகா ஜெபக்குமார். அவர்கள் காட்டிய அறையின் கதவினை மெல்ல நான் திறந்து, கால்கள் வாசலுக்கு வெளியே நிற்க, தலையினை மாத்திரம் அறையினுள் நுழைத்தவனாகப் பார்த்தபோது, தரையில் முழங்காலில் நின்றபடி, முழங்கையினையோ படுக்கையின் மீது ஊன்றியவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், முகத்திற்கு முன்னே வேதாகமம் விரித்தாவாறு இருந்தது.
இக்காட்சியினை நான் கண்டதும், ஜெபவேளையின்போது சகோதரரை இடையூறு செய்துவிடக்கூடாது என்று நினைத்தவனாக அறைக் கதவினை மெல்ல சாத்திவிட்டு, வெளியே வந்தேன்; அடுத்த அறையில் அமர்ந்திருந்த சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் நான் வெளியே வந்ததைக் கண்டதும். 'பாத்துட்டீங்களா?' என்று கேட்டார். நானோ, அண்ணன் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள், எனவே உடனே வந்துவிட்டேன் என்று பதிலளித்தேன். சுமார் ஒருமணி நேரம் கழித்து 10:30 மணிக்கு மீண்டும் சகோதரரைச் சந்திக்கும்படியாகச் சென்றேன்; அப்பொழுதும், சகோதரர் முழங்காலில் நின்றவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார்; மீண்டும் சந்திக்காமல் வீட்டிற்கு வந்துவிட்டேன்; எனினும் இக்காட்சி எனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது.
இத்தனை வயதில், இருக்கையில் அமர்ந்து ஜெபிக்கலாமே? இப்படி முழங்காலில்தான் நின்று ஜெபிக்கவேண்டும் என்பது கட்டாயமா? என்ற கேள்விகளைச் சிந்தனையில் சுமந்தவனாக வீடுவந்து போனது. சுமார் 11 மணிக்கு, எனது வாட்ஸ்அப்பில் ''Kiruba you can visit me now" என்று சகோதரரிடமிருந்து ஓர் செய்தி வந்தது. சந்திக்கும்படியாகப் புறப்பட்டுச் சென்றேன்; அப்போதும் முழங்காலில்தான் நின்றுகொண்டிருந்தார்; நான் நுழைந்தபின்புதான் முழங்காலிலிருந்து எழுந்தார்; 'அண்ணன் நீங்கள் சரியாத மரம்' என்று அவரைக்குறித்து அவரிடமே எனது உதடுகள் உச்சரித்தன. மேலும், அறைக்குள் நான் வந்துபோனது அவருக்கு எப்படித் தெரியும்? என்ற மற்றும் ஒரு கேள்வி எனக்குள் எழும்ப, 'ஜெபநேரத்தில் எனக்கல்ல, கர்த்தருக்கே' முதலிடம் என்ற உணர்வு எனக்கு மேலும் ஓர் பாடமானது.
www.sinegithan.in
Comments
Post a Comment