சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
இறைவனையா?
இறைவனைப் பற்றியா?
15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.
அப்போது 'Knowing God' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனைப் பற்றிய அறிவு அல்ல' 'இறைவனை அறிவது' என்று கூறியதுடன், அவ்விரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தையும் விளங்கச் செய்தபோது, அதன் ஆழம் இன்னும் சற்று அதிகமாக எனது அறிவிற்கு எட்டியது. 'இறைவனைப் பற்றிய அறிவு இந்த உலகத்தில் அநேக மனிதர்களுக்கு இருக்கின்றது; ஆனால், அவர்கள் இன்னும் இறைவனை அறியாதிருக்கிறார்கள்'. அரசியல்வாதிகளுக்கும், அந்நிய ஜனங்களுக்கும் மற்றும் அநேக உலகத் தலைவர்களுக்கும்கூட ஆண்டவரைப் பற்றிய அறிவு உண்டு; ஆனால், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை அறிந்தவர்கள் சிலர் மாத்திரமே என்றார். அவரது வார்த்தையின் வாயிலாக, 'இறைவனை அறிவது' என்பது, இறைவனோடு கொள்ளும் தனிப்பட்ட உறவினைப் பொறுத்தது, அவருக்காக அர்ப்பணிப்பதைப் பொறுத்தது, அவரது சித்தத்தின்படி செயல்படுவதைப் பொறுத்தது என்ற உண்மையின் உச்சத்தை உணர்ந்துகொண்டவனாக அறையினை விட்டு வெளியே வந்தேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக