சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
கடினமல்ல, களிப்பு
ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியில் இணைந்த நாட்களில், 'GLIMPSES' என்ற பெயரில் ஆங்கில செய்தி மலர் ஒன்று வெளியிடப்பட்டுவந்தது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியினையும், ஜெம்ஸ் பணித்தள செய்திகளையும் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வாழும் ஜெபப் பங்காளர்களுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் இச்செய்திமலர் தயாரிக்கப்பட்டுவந்தது. இந்தச் செய்தி மலருக்காக சகோதரருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அந்நாட்களில் எனக்குக் கிடைத்தது. சுமார் 500-க்கும் அதிகமான அந்த செய்திமலர்களை, ஜெம்ஸ் அச்சகத்தில் அச்சடித்து, சகோதரரின் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்போம், ஒவ்வொரு மலரிலும் சகோதரர் கையெழுத்திடுவார், பின்னர் அது ஜெபப்பங்காளர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு முறையும் சகோதரர் அத்தனை மடலிலும் கையெழுத்திடுவதைக் கவனித்த நான், கையெழுத்துக்குப் பதிலாக சகோதரரின் கையெழுத்து அடங்கிய முத்திரை ஒன்றை தயாரிக்கலாமே, இதனால் சகோதரரின் வேலை எளிதாகிவிடுமே என்று எண்ணினேன். ஒருமுறை அவர் கையெழுத்திட்ட 'GLIMPSES' செய்தி மலர்களை எடுக்கும்படியாக அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அவரது மேஜையில் இருந்த அனைத்துப் செய்தி மலர்களிலும் அவர் கையெழுத்திட்டு ஆயத்தமாக வைத்திருந்தார். நான் அதனை கையில் எடுத்தவாறு, என் மனதின் எண்ணத்தை அவரிடம் சொல்லத் தொடங்கினனே;. 'அண்ணன், ஒவ்வொரு முறையும் இத்தனை கையெழுத்து போடுகிறீர்கள், உங்களுக்கு கை வலிக்கும், எனவே, உங்கள் கையெழுத்து அடங்கிய ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கலாம், நானே அதனை பதித்து அனுப்பிவிடுவேன், உங்கள் வேலை எளிதாகிவிடும்; இல்லையென்றால், அச்சடிக்கும்போதே, உங்கள் கையெழுத்தையும் சேர்த்து அச்சடித்துவிடலாம்' என்றேன். எனது வார்த்தைகளைக் கேட்டதும், சற்று நேரம் கூட யோசிக்காமல் சட்டென, 'கிருபா, எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு, இந்த ஊழியத்தைத் தாங்கிக்கொண்டுவருகின்றார்கள், அவர்களுக்கு அனுப்பப்படும் இந்தச் செய்தி மலரில் கையெடுத்து இடுவது எனக்கு கஷ்டமாயிருக்கு என்று நீங்க நினைக்கிறீங்களா?' என்றார். என்னிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் பதிலை அவரே சொல்லிவிடட்டும் என்று நான் அமைதியாயிருந்தேன். 'இந்தச் செய்தி மலரில் நான் கையொப்பம் இடுவது, அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் நான் கடிதம் அனுப்புகின்ற திருப்தியை எனது மனதிற்குக் கொடுக்கிறது' என்றார். ஊழியனின் உண்மை சந்தோஷம் அப்போது எனக்குப் புரிந்தது, அது கடினமல்ல, களிப்பு என்பதும் எனக்குத் தெரிந்தது. ஜெபப் பங்காளர்களுக்கு அவரது மனதில் இருக்கும் இடத்தை அன்று நான் அறிந்துகொண்டேன். பாடாகப் பார்த்த எனக்கு அது பாடமாக மாறியது.
www.sinegithan.in
Comments
Post a Comment