சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
நல்லாயிருக்கீங்களா?
நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இருந்ததினால், வாரம் ஒருமுறை சகோதரர் பிரபாகர் அவர்களிடம் வந்து வயலினையும் கற்றுக்கொண்டிருந்தேன். இருபது கி.மீட்டர் வரவேண்டியதிருந்தாலும், இசையின் மேல் பிரியமுள்ள எனக்கு அது கடினமாய்த் தோன்றவில்லை. எந்த ஒரு ஆயத்தமுமின்றி, எழுதிவைத்திராமல் நானாக இயற்றிப் பாடிய ஓர் கீர்த்தனைப் பாடலை சகோதரரிடம் பாடியபோது, 'இது, யூதர்களுடைய ஆராதனை முறைகளில் ஒன்று' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். இப்படியாக, பல சகோதரர்களைச் சந்தித்து என்னை நானே உற்சாகப்படுத்திக்கொண்டபோதிலும், ஆவிக்குரிய ஆலோசனைக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரை அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்திக்கும் வழக்கம் எனக்கு இல்லாதிருந்தது; 'வணக்கம்' என்ற வார்த்தையோடுதான் அவரிடத்தில் நான் விடைபெற்றுக்கொண்டிருந்தேன். 2003-ம் ஆண்டு, ஒருமுறை அலுவலகப் பணியின் நிமித்தம் ஸ்கூட்டரில் தனியாக சிக்காரியா வந்திருந்தேன். அலுவலகத்தின் முன் பகுதியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, தலைமை அலுவலகத்தில் செய்யவேண்டிய பணிகளைச் செய்து முடித்துவிட்டு வளாகத்தின் பிரதான வாசல் அருகே நின்றுகொண்டிருந்தபோது, தற்செயலாக அங்கு வந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னைக் கண்டார்; 'தம்பி, நல்லாயிருக்கீங்களா?' என்று கேட்டார். நானோ, நல்லாயிருக்கிறேன் என்ற வார்த்தையைக் கூட பதிலாகக் கூறாமல், சிரித்தவாறு, சொற்களையெல்லாம் தொண்டைக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அப்போது, எனக்கு அருகே நின்றுகொண்டிருந்த மற்றொரு ஜெம்ஸ் ஊழியர் என்னிடத்தில், 'நல்லாயிருக்கீங்களா?' என்று எல்லாரிடத்திலும் அண்ணன் கேட்டுக்கொண்டேயிருப்பதில்லை, அவருக்கு தோன்றுகிற நபர்களிடத்தில்தான் கேட்பார் என்று சொன்னார். 'நல்லாயிருக்கீங்களா?' என்று சகோதரர் கேட்டால், அதற்குள் அர்த்தங்கள் பல பொதிந்திருக்கும் என்றார் அவர். அர்த்தங்கள் எதுவாயிருந்தாலும், 'நல்லாயிருக்கீங்களா?' என்று என்னைப்பார்த்து அவர் பேசிய வார்த்தையின் சத்தமே அன்று எனக்குப் போதுமானதாயிருந்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக