வெள்ளி, 16 செப்டம்பர், 2022

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 57


இறைவனையா?

இறைவனைப் பற்றியா?




    15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது. 

    அப்போது 'Knowing God' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனைப் பற்றிய அறிவு அல்ல' 'இறைவனை அறிவது' என்று கூறியதுடன், அவ்விரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தையும் விளங்கச் செய்தபோது, அதன் ஆழம் இன்னும் சற்று அதிகமாக எனது அறிவிற்கு எட்டியது. 'இறைவனைப் பற்றிய அறிவு இந்த உலகத்தில் அநேக மனிதர்களுக்கு இருக்கின்றது; ஆனால், அவர்கள் இன்னும் இறைவனை அறியாதிருக்கிறார்கள்'. அரசியல்வாதிகளுக்கும், அந்நிய ஜனங்களுக்கும் மற்றும் அநேக உலகத் தலைவர்களுக்கும்கூட ஆண்டவரைப் பற்றிய அறிவு உண்டு; ஆனால், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை அறிந்தவர்கள் சிலர் மாத்திரமே என்றார். அவரது வார்த்தையின் வாயிலாக, 'இறைவனை அறிவது' என்பது, இறைவனோடு கொள்ளும் தனிப்பட்ட உறவினைப் பொறுத்தது, அவருக்காக அர்ப்பணிப்பதைப் பொறுத்தது, அவரது சித்தத்தின்படி செயல்படுவதைப் பொறுத்தது என்ற உண்மையின் உச்சத்தை உணர்ந்துகொண்டவனாக அறையினை விட்டு வெளியே வந்தேன். 

புதன், 6 அக்டோபர், 2021

போதகர் கே.ஜே. ஆபிரகாம்

 

 

போதகர் கே.ஜே. ஆபிரகாம்







இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்திருந்த நாட்கள் அவை. எப்போதும் ஆவிக்குரியவைகளின் மேலேயே நாட்டம் கொள்ளவே மனதில் வேட்கை அதிகரித்திருந்த வேளை அது. ஆலய ஆராதனைகளில் தவறாது ஒவ்வொரு நாளும் பங்கேற்கும் பழக்கத்திற்குள் வாழ்க்கையினை அர்ப்பணித்துக்கொண்டதுடன், ஆங்காங்கே நடைபெறும் ஆவிக்குரிய கூட்டங்களிலும், முகாம்களிலும் பங்கேற்று வேளா வேளைக்கு அவர் தரும் உணவினைப் பெற்றுக்கொள்வதுடன், மேலும் வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன். தினமும் தவறாமல் தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிப்பது, அவர் தரும் வார்த்தைகளை வேத வாசிப்பின்போது பெற்றுக்கொள்வது என என்னால் இயன்ற பெலத்தைக் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அஸ்திபாரமிட்டுக்கொண்டிருந்தேன்; என்றாலும், யாராவது மூத்தவர்கள் சிலர் இத்தகைய ஓட்டத்தில் எனக்கு உடனிருந்து உதவினால் இன்னும் மேன்மையானவைகளைத் தெரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் பாக்கியமாயமையுமே என்ற எண்ணங்கள் அவ்வப்போது என் நினைவில் வந்து வந்து சென்றுகொண்டிருந்தன. இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், இனி என்ன செய்யவேண்டும்? என்ற பெரியதோர் கேள்விக்கு முன் பதிலளிக்கத் தெரியாதவனாக பல நாட்கள், மாதங்கள் நின்றுகொண்டிருந்தேன். அத்தகைய நேரத்தில் எனக்கு அறிமுகமானவரே தாத்தா கே.ஜே ஆபிரகாம். தூத்துக்குடி மாவட்டத்தின் நாசரேத் நகருக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த தேவ சபையில் தலைமைப் போதகராக ஊழியம் செய்துகொண்டிருந்தார். ஆலயத்தில் வாரம் ஒருமுறை வேதபாட வகுப்பினையும் நடத்திக்கொண்டிருந்தார். 


போதகரல்ல, தாத்தாவாக


முதன் முதலாக அவரைச் சந்தித்தபோது, நான் யார் என்பதை என்னோடு கூட வந்திருந்த சகோதரர் அறிமுகப்படுத்திவைத்தார். பாஸ்டர், பாஸ்டர் என்று நாங்கள் அவரை அழைக்கத் தொடங்கினதைக் கவனித்த அவர், 'பாஸ்டர் வேண்டாம், தாத்தா போதும்' என்றார். எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. எனினும், அன்று முதல் அவரை பாஸ்டர் என்று அல்ல, தாத்தா என்றே நாங்கள் அழைக்கத் தொடங்கினோம். மேய்ப்பன் என்ற ஸ்தானத்தையும் தாண்டி, தாத்தா என்ற உறவில் உடன் வைத்துக்கொண்டது எங்கள் அனைவருக்கும் அப்போது கிடைத்த பாக்கியமே.  தொடர்ந்து அவரது வேதபாட வகுப்புகளில் பங்கேற்றுவந்த நான், முழுகி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்ற சத்தியத்தினை உணர்ந்துகொண்டபோது, அதற்கு ஆயத்தமாகத்தொடங்கினேன். தேவனுடைய சித்தத்தின்படி பாவ மன்னிப்பின் நிச்சயத்திற்கென்று, 1994-ம் ஆண்டு முழுகி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன். பாரம்பரிய சபையினிலே மிகவும் பக்திவைராக்கியமாக பெற்றோர்களால் வளர்க்கப்பட்டிருந்த எனக்கு, அந்த நிகழ்வும் நாளும் மறக்க இயலாததே! ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபின், இந்த சபைக்குத்தான் வரவேண்டும் என்று எந்த ஒரு ஆலோசனையினைக்கூட எங்களிடம் கூறாது, தேவனுக்கு முன் தனது கடமையினை மாத்திரம் நிறைவேற்றிய அந்த தேவ மனிதர் இன்றும் எனது கண்களுக்கு முன் உயர்ந்துதான் நிற்கிறார். பின்னர், வாரம் ஒருமுறை அவர் நடத்தும் வேதபாட வகுப்புகளில் கலந்துகொள்ள ஆசித்து, சகோதரர்கள் சிலர் ஒன்றாக இணைந்து தவறாது செல்லத் தொடங்கினோம். என்றபோதிலும், சில நாட்ளுக்குப் பின் செல்ல இயலாது போனதினால், வேறொரு நாளில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது, நாங்கள் அவரை நோக்கி, 'தாத்தா, எங்களால் இப்போது வேதபாட வகுப்பிற்கு வர இயலவில்லை; அந்த நாள் எங்களுக்கு உகந்ததாக இல்லை' என்று கூறினோம். அதைக் கேட்டதும், 'அப்படியென்றால் எப்போது வர முடியும்?' என்று எங்களிடம் கேட்டார்; நாங்கள் வியாழக்கிழமையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொன்னோம். எங்களது பதிலைக் கேட்டதும், சரி அந்த நாளிலேயே வாருங்கள் என்று சொல்லிவிட்டார்; இதனை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அது ஓர் வியாழக்கிழமை; வேதபாட வகுப்பிற்காக சகோதரர்கள் அனைவரும் ஆயத்தமுடன் அவரது சபைக்குச் சென்றடைந்தோம். இன்று என்ன சொல்லித்தருவார்? என்ற கேள்வி எங்கள் உள்ளத்தில் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, அவரோ எங்களை நோக்கி, 'இன்று வேதத்தின் எந்த புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். சகோதரர்கள் நாங்கள் அனைவரும், ஒருவரையொருவர் திரும்பிப் பார்க்க, நானோ சடக்கென்று, 'வெளிப்படுத்தல் புத்தகத்திலிருந்து' என்று பதிலளித்தேன். அப்போது நான் பலமுறை அதனை வாசித்துக்கொண்டிருந்ததினால், அதனை மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் அப்படிச் சொன்னேன். எத்தனை மூத்த போதகராயிருப்பினும், எனது விருப்பத்தை அவர் நிராகரிக்கவில்லை; வெளிப்படுத்தல் புத்தகத்திலிருந்தே வேதபாட வகுப்பினைத் தொடங்கினார். 1996-ம் ஆண்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்காக சென்னை சென்றுவிட்ட காரணத்தினாலும், அதன் பின்னர் பணியின் நிமித்தம் இராஜஸ்தான் சென்றுவிட்டதினாலும், பின்னர் மிஷனரியாக அர்ப்பணித்து பீஹார் சென்றுவிட்டபடியினாலும் அவரை மீண்டும் சந்திக்க இயலாமற்போயிற்று. என்றபோதிலும், சுமார் இரண்டு ஆண்டுகள் ஓர் ஆவிக்குரிய தகப்பனோடு இருந்த உணர்வில் இன்றும் என் ஆத்துமாவுக்கு திருப்தி உண்டு. 'குட்டப்பன்' என்று தன்னைக் குறித்து அடிக்கடி அவர் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் இன்றும் எனது மனதை விட்டு நீங்காதவை; சிறுவனாயிருந்தபோது எனது மகனையும் அவ்வாறே அழைத்துவந்தேன். 


பிரியாணி தின்னாச்சி, பழங்கஞ்சி என்னத்துக்கு? 


அந்நாட்களில், நான் பீஹாரில் ஜெம்ஸ் ஸ்தாபனத்தில் மிஷனரியாக பணிசெய்துகொண்டிருந்தேன். ஒருமுறை விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தபோது, 'கருங்குளம்' என்ற ஊரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நற்செய்திக் கூட்டங்களில், போதகர் கே.ஜே. ஆபிரகாம் செய்தியளிக்கிறார் என்ற செய்தியினை அறிந்து, அக்கூட்டத்தில் பங்கேற்கும்படியாகப் புறப்பட்டுச் சென்றேன். முதல் நாள் கூட்டம் நன்றாக நடந்து முடிந்தது; போதகர் கே.ஜே. ஆபிரகாம் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். முதல் நாள் கூட்டம் முடிந்ததும், அவரை சந்திக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும் என்ற விருப்பத்தில், அவர் தங்கியிருந்த வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்தேன். அங்கிருந்த ஊழியர் சகோ. டேனியல் முரளி மூலமாக எனது விருப்பத்தைத் தெரிவித்தபோது, அந்த சகோதரர் என்னை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.  'என்னை எப்படி அறிமுகம் செய்துகொள்வது' 'நான் ஸ்ரீவைகுண்டத்தில் வேதபாடம் கற்றதெல்லாம் இப்போது இவருக்கு ஞாபகம் இருக்குமா?' போன்ற கேள்விகள் எனது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்க, என்னை அறிந்திருந்த, நான் பயின்ற பள்ளியில் உடன் பயின்ற  சகோ. டேனியல் முரளி அவருக்கு குறுகிய நேரத்தில் அறிமுகம் செய்துவைத்தார். ஜனங்கள் வந்துபோய்க்கொண்டிருந்ததினால், அதிகம் பேச இயலவில்லை, ஜெபித்துவிட்டு உடனே அறையிலிருந்து வெளியே வந்தவனாக, அங்கிருந்த சில அறிமுகமானவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, என்னை நோக்கி வந்த அந்த ஊழியர் (என்னை அறிமுகம் செய்தவர்), என்னை நோக்கி, 'சுந்தர், நீதான் நாளைக்கு கூட்டத்தில பேசணுமாம், தாத்தா சொன்னாங்க' என்று சொன்னார். என்னால், சகோதரர் டேனியல் முரளியின் வார்த்தைகளை நம்ப இயலவில்லை, என்னை கிண்டல் செய்வதற்காக சொல்லுகிறாரோ! என்று சிரித்த வண்ணம் டேனியல் முரளியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவரோ, 'உண்மையாகத்தான் சொல்கிறோன், தாத்தாதான் சொன்னாங்கள், நீதான் நாளைக்கு பேசணுமாம்' என்றார். நானோ, சற்று திகைத்தவனாக, இது உண்மைதானா? தாத்தாகிட்ட போய் ஒருமுறை கேட்டுவிடுவோமா? என்றெல்லாம் எண்ணத்தொடங்கினேன். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் அவரைச் சந்தித்திருக்கின்றேன்; இப்போது நான் ஆவிக்குரிய வாழ்க்கையில் எப்படி இருக்கின்றேன்? என்னால் பிரசங்கம் பண்ண முடியுமா? திடீரென்று என்னை எப்படி கூட்டத்தில் பேச அனுமதிக்கிறார்? அவருக்கு முன் இதுவரை நான் ஒரு பிரசங்கமும் செய்ததில்லையே? என்ற மேலும் சில கேள்விகள் என்னை துளைத்துக்கொண்டிருந்தன. என்றாலும், ஊழியராயிருக்கும் அந்த சகோதரர் பொய் சொல்லமாட்டார் என்ற உறுதியில், அடுத்த நாள் லாசருவைப் பற்றிய செய்தியோடு சென்றிருந்தேன். கூட்டம் நடக்கும் இடத்தை அடைந்ததும், கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்துகொண்டேன். கூட்டம் ஆரம்பமானது, சகோதரர் டேனியல் முரளி என்னிடத்தில் வந்து, தாத்தா முன்ன கூப்பிடுறாங்க என்றார். எத்தனை பெரிய மனிதர் அவர், அவரருகில் சென்று அமர்வதா? என்ற கேள்வி ஒருபுறம் என்னை ஆட்கொள்ள, அவருக்கு முன் பேசும்போது நான் எதிலும் தவறிழைத்துவிடக்கூடாதே என்ற நினைவும் என் எண்ணத்தில் நின்றுகொண்டேயிருந்தது. 

குறிப்பிட்ட நேரத்தில் பிரசங்கத்தை முடித்தேன், எனது பிரசங்கத்திற்குப் பின்பு அவர் பிரசங்கம் செய்வார் என்று எதிர்பார்த்தவனாக இருக்கையில் வந்து அமர்ந்தேன். அப்போது, பேசத்தொடங்கிய அவர், 'பிரியாணி தின்னாச்சி, பழங்கஞ்சி என்னத்துக்கு?' என்று சொல்லிவிட்டு ஜெபித்துவிட்டு கூட்டத்தை நிறைவு செய்தார். இத்தனை பெரிய மனிதராயிருந்தும், வயதிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் எத்தனையோ சிறியவனாயிருந்த என்னை நம்பி, தனது மேடையினையே எனக்கு பகிர்ந்துகொடுத்த அந்த மனிதர் எத்தனை உயர்ந்தவர். 


உனக்கு ஒன்னுமில்ல


ஒருமுறை வாலிபனாயிருந்தபோது, சரீரத்தில் மிகவும் வியாதிப்பட்டவனாக, வீட்டினுள் படுக்கையிலேயே  முடங்கிக் கிடந்தேன். எழுந்திருக்கவும், வெளியே செல்லவும்கூட இயலாதவனாக அறைவீட்டிற்குள்ளேயே கிடந்தேன். அநேக சகோதரர்களும், உறவினர்களும் என்னைப் பார்க்க வந்தபோதிலும், பரிதாபமான வார்த்தைகளையே பேசிக்கொண்டிருந்ததினால், 'எனது வாழ்க்கை இப்படியாயிற்றே, என்னைப் போன்ற பிற வாலிபர்கள் எத்தனை வலிமையாக இருக்கின்றார்கள்? இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட எனக்கு, அவருக்காக ஓடவேண்டும் என்ற விருப்பம் கொண்ட எனக்கு, ஜெபக் குழுக்களில் ஆர்வமாக பங்கெடுத்துக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் இத்தகைய நிலை?' என்ற கேள்விகள் மாத்திரமே எனது சிந்தையில் ஓடிக்கொண்டிருந்த நாள்கள் அவை. அப்போது, ஒரு முறை செந்தியம்பலத்தில், எனது வீடு அமைந்திருக்கும் தெருவின் முனையிலிருக்கும், போதகர் சாலமோன் அவர்களது வீட்டிற்கு தாத்தா கே.ஜே. ஆபிரகாம் வருதாகக் கேள்விப்பட்டேன். எப்படியாகிலும் அவரைச் சந்தித்துவிடவேண்டும் என விரும்பினேன்; என்றாலும், பெற்றோர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பார்களா? என்ற கேள்வி என் தொண்டையை நெருக்கியது. இருந்தபோதிலும், எனது தாயாரிடம் அனுமதி கேட்டேன், முதலில் வேண்டாம் என்று தட்டிக்கழித்தவர்கள், நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருந்தினால், சரி போய்ட்டுவா என்று அனுமதி தந்தார்கள். போதகர் சாலமோன் வீட்டில், கூட்டம் நடைபெறும் அறையில் ஒரு புறத்தில் சுவற்றில் சாய்ந்தவனாக உட்கார்ந்திருந்தேன். அவ்வப்போது, தாத்தாவையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன், இவர் மூலமாக ஏதாவது ஒரு விடுதலை வந்துவிடாதா? என ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய சரீர நிலையினைக் குறித்து, போதகர் கே.ஜே. ஆபிரகாமுக்கு போதகர் சாலமோன் ஏற்கனவே எடுத்துச் சொல்லியிருந்தார். 

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, திடீரென போதகர் கே.ஜே. ஆபிரகாம் என்னை நோக்கி, ஒரு வேத பகுதியைச் சொல்லி வாசிக்கச் சொல்ல, நானோ, திக்கித் திக்கித், திணறித் திணறி வாசிக்கத் தொடங்கினேன்; அப்போது எனக்கு இருந்த பெலன் அவ்வளவுதான். கூட்டம் முடிந்ததும், என்னை அழைத்து ஜெபித்த போதர் கே.ஜே. ஆபிரகாம் 'உனக்கு ஒன்னுமில்ல' என்று சொல்லி அனுப்பிவிட்டார். எவ்வளவு கஷ்டப்படுகிறேன், இப்படி ஒன்னுமில்லன்னு சொல்லிட்டாரே என்று ஒருபுறம் நான் நினைத்துக்கொண்டாலும், பதில் ஏதும் சொல்லாமல் வீட்டை வந்தடைந்தேன். 

சில நாட்கள் சென்றது, ஒரு நாள் நான் படுத்திருக்கும்போது, ஆண்டவரே! எனக்கு ஏன் இந்த நிலை? இதுவரைக்கும் நான் உம்மிடம் எத்தனையோ முறை ஜெபத்தில் பேசியிருக்கிறேன்; இப்போதாவது நீர் வந்து என்னிடத்தில் பேசக்கூடாதா? என்ற கேள்விகளையே தேவனுக்கு முன் வைத்துக்கொண்டிருந்தேன். திடீரென யாரோ தனது கைகளை எனது வயிற்றின் மீது வைப்பதைப் போன்று உணர்ந்து கண் விழித்து எழுந்தேன், எனது வயிற்றின் மீது இரண்டு கரங்கள் வைக்கப்பட்டிருந்தன, அது சொப்பனமும் அல்ல தரிசனமும் அல்ல, நேரடிக் காட்சி என்பதை எனது கண்களால் உறுதிசெய்துகொண்டேன். அந்தக் கைகள் என் மீது வைக்கப்பட்டதும், எனக்குள் பெலன் உண்டானது, எழுந்தேன், நடந்தேன், எல்லாவற்றையும் செய்யத் தொடங்கினேன், திடீரென என்னில் காணப்பட்ட இந்த மாற்றத்தினால் வீட்டார் சற்று யோசித்தாலும், குடும்பம் மகிழ்ச்சியடைந்தது. 


சந்திப்பில் முந்தியவர்

 




சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர். 

சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை  அவருக்கு  எப்படித்  தெரியும்?  என்ன  பேசுவது?  போன்ற சில கேள்விகள் என்னைச் சுற்றிக்கொண்டிருந்தன. அதுதான் நான் முதல் முறையாக தனியாக அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நேரம். எனவே, அந்த ஊழியர் அறையினுள் வந்து சகோதரர் தினகரனிடம் என்னை அறிமுகப்படுத்திச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக்கொண்டிருந்த நான், மெல்ல அறைக் கதவினைத் திறந்தேன், அறையில் எந்தப் பக்கம் அமர்ந்திருப்பார்? என்ற எண்ணத்தோடு,  தலையினை  உள்ளே  நுழைத்துப்  பார்த்தபோது,  அறையினுள்  இருந்த  சகோதரர்  தினகரன்,  வயதான  நிலையிலும்,  இருக்கையிலிருந்து  மெல்ல எழுந்தவண்ணம், இரு கரங்களையும் கூப்பியவாறு 'ஸ்தோத்திரம் தம்பி' என்று  சிரித்த  முகத்துடன்  வரவேற்றார்;  பின்னதாகவே  நான்  'ஸ்தோத்திரம்'  என்று  சொன்னவாறு  அவரை  ஏறிட்டுப்  பார்த்தேன்;  முதலில்  நான்  அல்லவா  சொல்லியிருக்கவேண்டும்,  இத்தனை  வயதானவராக,  பெலவீனமுள்ளவராக  இருந்தபோதிலும்  இருக்கையிலிருந்து  அவர்  எழும்பவேண்டியது  அவசியமா?  என்று அவர் முந்திக் கொண்ட காரியங்களைக் குறித்து என் மனம் சிந்திக்கத் தொடங்கியது. அவரைத் தவிர அறையில் வேறு யாரும் இல்லை. முதன் முதலாக அறையில் நேரடியாகப் பார்த்த அனுபவத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லாதவனைப் போல, அருகில் சென்று முழங்கால் படியிட்டு ஜெபித்துவிட்டு, திரும்பி வந்தேன். இரண்டு முறை அறையில் அவரை தனியே சந்தித்தபோதும் முந்திக்கொண்டவது அவரே. கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். (ரோம 12:10) என்ற சத்தியத்தை அவருடனான சந்திப்பு எனக்குக் கற்றுக்கொடுத்தது. 

மற்றொருமுறை,  சென்னை  மெரீனா  கடற்கரையில்  'இயேசு  அழைக்கிறார்'  கூட்டங்கள்  நடைபெற்றுக்கொண்டிருந்தது,  அன்றைய  நாட்களில்  நிலவிய  சூழ்நிலையின் நிமித்தமாக, காவல்துறை பாதுகாப்பு வாகனங்களுடன் ஒவ்வொரு நாளும்  கூட்டத்தி;ற்கு  வந்தார்  சகோதரர்  தினகரன்.  எல்லா  கூட்டங்களிலும்  தவறாது சென்றுவந்தேன். கடைசி நாள் கூட்டம் முடிந்ததும், மேடையிலிருந்து அவர்  புறப்பட  ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.  அவரது  வாகனம்  மேடைக்கு  அருகே  கொண்டுவரப்பட்டது.  மேடையிலிருந்த  ஊழியர்களுடன்  பேசிவிட்டு,  உதவியாளர்களின்  உதவியுடன்  மேடையை  விட்டு  இறங்கிக்கொண்டிருந்தார்.  சகோதரருக்கு  எப்படியாவது  கைகொடுத்துவிடவேண்டும்  என்ற  ஆசையில்  மேடைக்கு  அடியில்,  அவரது  வாகனத்திற்கு  அருகில்  நின்றுகொண்டிருந்தேன்.  என்றபோதிலும், சகோதரர் வாகனத்தில் ஏறும்போது, அவரைச் சந்திக்க விடாமல் காவல்துறையினர் மறித்துக்கொண்டனர். வாகனத்தில் ஏறிய சகோதரர், அருகில் நின்றுகொண்டிருந்த அநேகரைப் பார்த்து கையசைத்துக்கொண்டிருந்தார். கதவு அடைக்கப்பட்டு, வாகனம் புறப்பட்டு சுமார் பத்து அடி தூரம் மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. வாகனத்தின் உள்ளே சகோதரர் அமர்ந்திருந்தது கூட எனது கண்களுக்குத் தென்படவில்லை,   வாகனத்துடன்   நானும்   கையசைத்தவாறு   மெல்ல   நடந்துகொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தின் கண்ணாடி கீழே இறங்கியது சகோதரர் கரத்தை நீட்டினார், ஓடிச் சென்று அவருக்குக் கைகொடுத்தேன்.  சில விநாடிகளில் வாகனம் வேகமாகச் சென்றது. அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் என்னை  வித்தியாசமாகப்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  இதனைக்  கண்ட  காவல்துறையினர், ஓடிவந்து என்னை இழுத்தனர், கண்டித்தனர்; நீங்கள் யார்? என்று  கேட்டவாறு,  இப்படிச்  செய்யக்கூடாது  என்று  கடிந்துகொண்டனர்.  நான்  அல்ல,  சகோதரர்தான்  கண்ணாடியை  கீழே  இறக்கி  கைகொடுத்தார்  என்று  காவல்துறையினரிடம் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். பலத்த பாதுகாப்பின் மத்தியிலும், தானே கரம் நீட்டினதினாலேயே அன்று அச்சந்திப்பு சாத்தியமாயிற்று என்பது இன்றும் என் நினைவில் நிற்கும் நிகழ்வு. 

சரியாத மரம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 56

சரியாத மரம்



.அது  ஓர்  காலை  வேளை,  9.30  மணி;  அலுவலகத்திற்குச்   செல்லும்   வழியில்   சகோதரர்    அகஸ்டின்    ஜெபக்குமார்    அவர்களைச்  சந்திக்கும்படியாக  அவரது  இல்லத்தினை  நோக்கிச்  சென்றேன்.  வீட்டின்  வெளியே  காலணிகளைக்  கழற்றிவிட்டு,  முன்  அறையினுள்  நுழைந்தேன்;  முன்  அறையின்  இருக்கைகள்  அனைத்தும்  எவரும்  இல்லாமல்  காலியாயிருந்தது; இதனைக் கண்டதும், சகோதரரின் வீட்டில் யாரும் இல்லையோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்பியது; அதனைத்  தொடர்ந்து,  அலுவலகத்திற்குச்  சென்றுவிட்டு  அப்புறம்   சகோதரரைச்   சந்தித்துக்கொள்ளலாம்   என்ற  நினைவும் எனக்குள் உருவானது. 

என்றாலும்,  சகோதரரைச் சந்திக்கும் ஆர்வத்தில், அடுத்த அறையினை  நோக்கி  நகர்ந்தேன்.  அங்கோ,  சகோதரர்  அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் துணைவியார் சகோதரி ரூபலேகா  ஜெபக்குமார்  அமர்ந்திருந்தார்;  அவர்களைக்  கண்டதும்,  'அக்கா,  அண்ணன்  இருக்காங்களா?'  என்று  கேட்டேன். அந்த ரூம்ல இருக்காங்க, ஜெபம் பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு  நினைக்கிறேன்'  என்றார்?  தயங்கியபடி  நின்றுகொண்டிருந்த   என்னைக்   கண்டதும்,   சகோதரர்   இருக்கும் அறையினை நோக்கி விரல் நீட்டியாவறு, அந்த அறையில்தான் அண்ணன் இருக்கிறார்கள் என்றார் சகோதரி ரூபலேகா  ஜெபக்குமார்.  அவர்கள்  காட்டிய  அறையின்  கதவினை  மெல்ல  நான்  திறந்து,  கால்கள்  வாசலுக்கு  வெளியே  நிற்க,  தலையினை  மாத்திரம்  அறையினுள்  நுழைத்தவனாகப்  பார்த்தபோது,  தரையில்  முழங்காலில்  நின்றபடி,  முழங்கையினையோ   படுக்கையின்   மீது  ஊன்றியவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், முகத்திற்கு முன்னே வேதாகமம் விரித்தாவாறு இருந்தது. 

இக்காட்சியினை  நான்  கண்டதும்,  ஜெபவேளையின்போது  சகோதரரை    இடையூறு  செய்துவிடக்கூடாது    என்று    நினைத்தவனாக  அறைக்  கதவினை  மெல்ல  சாத்திவிட்டு,  வெளியே  வந்தேன்;  அடுத்த  அறையில்  அமர்ந்திருந்த  சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் நான் வெளியே வந்ததைக் கண்டதும்.  'பாத்துட்டீங்களா?'  என்று  கேட்டார்.  நானோ,  அண்ணன் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள், எனவே உடனே வந்துவிட்டேன்  என்று  பதிலளித்தேன்.  சுமார்  ஒருமணி  நேரம்  கழித்து  10:30  மணிக்கு  மீண்டும்  சகோதரரைச்  சந்திக்கும்படியாகச்  சென்றேன்;  அப்பொழுதும்,  சகோதரர்  முழங்காலில் நின்றவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார்; மீண்டும் சந்திக்காமல்  வீட்டிற்கு  வந்துவிட்டேன்;  எனினும்  இக்காட்சி  எனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. 

இத்தனை வயதில், இருக்கையில் அமர்ந்து ஜெபிக்கலாமே? இப்படி  முழங்காலில்தான்  நின்று  ஜெபிக்கவேண்டும்  என்பது  கட்டாயமா? என்ற கேள்விகளைச் சிந்தனையில் சுமந்தவனாக வீடுவந்து போனது. சுமார் 11 மணிக்கு, எனது வாட்ஸ்அப்பில் ''Kiruba you can visit me now" என்று  சகோதரரிடமிருந்து  ஓர்  செய்தி  வந்தது.  சந்திக்கும்படியாகப்  புறப்பட்டுச்  சென்றேன்;  அப்போதும்  முழங்காலில்தான்  நின்றுகொண்டிருந்தார்;  நான்  நுழைந்தபின்புதான் முழங்காலிலிருந்து எழுந்தார்; 'அண்ணன் நீங்கள்  சரியாத  மரம்'  என்று  அவரைக்குறித்து  அவரிடமே  எனது  உதடுகள்  உச்சரித்தன.  மேலும்,  அறைக்குள்  நான்  வந்துபோனது  அவருக்கு  எப்படித்  தெரியும்?  என்ற  மற்றும்  ஒரு கேள்வி எனக்குள் எழும்ப, 'ஜெபநேரத்தில் எனக்கல்ல, கர்த்தருக்கே' முதலிடம் என்ற உணர்வு எனக்கு மேலும் ஓர் பாடமானது.

                               www.sinegithan.in

மரித்தும் பேசுகிறேன்!

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

          

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 55

மரித்தும் பேசுகிறேன்!


 

2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளைவாக 'Encounter' என்ற பெயரில் இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டுவருகின்றேன் என்றேன். எனது விருப்பத்தினையும், உற்சாகத்தினையும், பரந்த நோக்கத்தினையும் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த சகோதரர் என்ன சொல்லப் போகின்றார் என்பதைக் கேட்க ஆயத்தமாயிருந்த வேளையில், சகோதரர் மெல்ல என்னை நோக்கி, 'மரித்தும் பேசுகிறேன்' என்று சிரித்தவாறு இரு வார்த்தைகளை மாத்திரம் உதிர்த்துவிட்டு, தனது நடையைத் தொடர்ந்தார். உயிரோடு இருக்கும் ஒரு நபர் 'மரித்தும் பேசுகிறேன்' என்று சொல்லிய இந்த வார்த்தைகளின் கருத்துக்கள் எனது சிந்தையை சில மணி நேரமாகச் சுற்றிக்கொண்டேயிருக்க, மரித்தாலும் அவரை பேசவைக்கும் பணியினையே நான் செய்துகொண்டிருக்கிறேன் என்ற மனநிறைவுள்ளவனாக மாறினேன். மரித்தாலும் பேசவேண்டும் என்ற மனமுடைய மனிதர் இவர் என சகோதரை அப்போது நான் அடையாளம் கண்டுகொண்டேன். அடுத்தநாள் அலுவலகம் சென்றபோது, அவரைக் குறித்து எழுதியிருந்த குறிப்புகள் பலவற்றை பிரிண்ட் எடுத்து அவரது கையில் கொடுத்தேன். சந்தோஷத்துடன் அதனைப் பெற்றுக்கொண்டார். ஒருவன் உண்டதை, உலகம் மென்று திண்ணட்டுமே என்ற ஆசை எனக்கு. மரித்தும் பேசவேண்டும் என்ற ஆசை உண்டா உங்களுக்கு.

www.sinegithan.in

வாக்குத்தத்தமான வாக்கு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 54

வாக்குத்தத்தமான வாக்கு


 

ஒருமுறை சென்னையில் ஜெம்ஸ் மீடியா துறையின் ஆலோசனைக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஜெம்ஸ் தலைவர்கள் சிலரும், முன்னேற்றப் பணித் தலைவர்களும்; அக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்தனர். பீஹார் ஜெம்ஸ் மீடியா துறையின் சார்பாக நான் அக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றிருந்தேன். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஜெம்ஸ் அலுவலகத்தில் ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின்போது, ஜெம்ஸ் மீடியா துறையின் பல்வேறு காரியங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பங்கேற்றவர்களின் ஆலோசனைக்கு முன் வைக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டன. பீஹார் மீடியா துறையின் அலுவலகக் காரியங்களையும், அலுவலகக் கணக்குகளையும் அப்போது நான் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆண்டில், மீடியா துறை பட்ஜெட்டினை தயாரித்து அளித்திருந்த நான், அதில் வரவேண்டிய மீதமுள்ள தொகையினை மனதில் கொண்டவாறு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பணம் விரைவில் கிடைத்துவிட்டால், குறிப்பிட்ட சில காரியங்களை விரைவில் செய்துமுடித்துவிடலாமே என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். முக்கியமான பல காரியங்கள் விறுவிறுப்பாகப் பேசி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பீஹார் மீடியாவைப் பற்றிப் பேச எனக்குத் தருணம் கிட்டியபோது, பட்ஜெட் தொகையில் மீந்திருக்கும் பணத்தைக் குறித்து எடுத்துச் சொன்னேன். அப்போது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னை நோக்கி, 'நாளைக்கே யாராவது வந்து கொடுத்தா, உடனே உங்ககிட்ட கொடுத்துவிடுகிறேன், என்னை ஆண்டவர் கடன்காரனாக வைக்கமாட்டார்' என்று சிரித்த முகத்தோடு சொன்னார். கூட்டம் முடிந்து பீஹார் வந்து சேர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் பட்ஜெட் பணத்தைக் குறித்துப் பேசியதைத் தவிற்திருக்கலாமோ என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. எங்கிருந்தாவது வரும் என்று விசுவாசத்தில் நிற்கிற ஒரு தேவ ஊழியனிடம், 'வேண்டும்' என்று வலுமையாகக் கேட்டுவிட்டதைப் போன்ற அழுத்தம் எனது மனதில் உண்டாயிருந்தது. எனினும், சகோதரரின் வார்த்தையினைக் கனம் பண்ணிய தேவன், ஒரு சில மாதங்களுக்குள், குறிப்பிட்ட அந்தத் தொகையினை சந்தித்தார். ஜெம்ஸ் அலுவலகத்தினிடமிருந்து மீடியா துறையின் அலுவலக வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்ட நான், சகோதரரை சிரித்த முகத்தோடு சந்தித்தேன், 'கடவுள் என்னை யாருக்கும் கடனாளியா வைக்கல' என்றார் சகோதரர். அவர் வாயிலிருந்த வந்த வார்த்தையினை, வாக்குத்தத்தமாக நிறைவேற்றிய தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.

www.sinegithan.in

உனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      

      

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 53

உனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?


 

2015, ஏப்ரல் 12, ஞாயிற்றுக் கிழமை, காலை ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை நடத்தும் வாய்ப்பு என்னுடையதாயிருந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு பீஹார், கைமூர் மலை மேல் உள்ள அதௌரா என்னுமிடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்படவிருந்ததை முன்னிட்டும், ஆராதனையில் பங்கேற்கும் ஊழியர்கள் அந்நிகழ்ச்சிக்குச் செல்லவிருந்ததாலும், ஆலய ஆராதனை விரைந்து முடிக்கப்பட்டது. அதௌரா பணித்தளத்திற்கு இரண்டு பேருந்துகள் புறப்பட்டபோதிலும், பேருந்தில் பயணித்து அத்தனை தூரம் என்னால் செல்ல இயலுமா? என்ற கேள்வியுடன் இருந்தேன் நான். எனது பெலவீனத்தைப் புரிந்துகொண்ட சகோதரி ரூபலேகா ஜெபக்குமார், தன்னுடைய வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டார். ஆராதனை, முடிந்ததும், 10.45 மணிக்கு சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் அவர்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்; சகோதரிகள் மூவர் உடனிருந்தனர். சுமார் மூன்று மணி நேர பயணம். நீண்ட பின் இருக்கையில், நீட்டி நிமிர்ந்து பயணிக்க வசதியாக, தலைக்கு தலையணை ஒன்றையும் சகோதரி முன் இருக்கையிலிருந்து எடுத்துக் கொடுத்தபோது, எனது பயணத்தின் மீது அவருக்கு இருக்கும் கரிசனை என் கண்ணில் பட்டது. அவரது வாயின் வார்த்தைகள், என்னுடைய வசதியை அவ்வப்போது விசாரித்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது உடலை நீட்டிப் படுத்துக் கொண்டேன். மதிய நேரம் nருங்கியது, தொடரும் பயணத்தை நிறுத்தாமல் பயணித்துக்கொண்டே உணவருந்தினோம். கொண்டுவந்த இட்லிகளை தட்டில் எடுத்துத் தந்தார் ஒரு சகோதரி. சாப்பிட்டு, நீர் அருந்தி, காகிதத்தால் கரங்களைத் துடைத்து, ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு அமர்ந்திருந்தோம். வாகனம் மலையின் மீது ஏற ஏற, தனது நினைவுகளால் கீழே இறங்கிக்கொண்டிருந்த சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் ஊழியத்தின் ஆதி ஆகமத்தின் ஒரு சுருளை விரித்து வாசித்தார்.

'ஜெம்ஸ் ஊழியத்தின் ஆரம்பம்; சொற்ப மிஷனரிகள், ஒரே குடும்பம், ஒரிடத்தில் உணவு என்ற நாட்கள் அவை. இருப்பதைக் கொண்டும், கர்த்தர் கொடுத்ததைக் கொண்டும் திருப்தியாக வாழக் கற்றிருந்த மிஷனரிகள். சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் ஊழியத்தை தீவிரமாகச் செய்துவந்தார்; மலையின் மேல் உள்ள கிராமங்களுக்கு சகோதரர் சென்றுவிட்டால் வீடு திரும்ப பல வாரங்கள் பிடிக்கும். ஊழியத்தில் இத்தனையாய் தனது பெலத்தைச் செலவிடும் கணவர் வீடு வரும்போது, திருப்தியாக சாப்பிடவேண்டும் என்று விருப்பங்; கொண்டிருந்தவள் நான். ஒருநாள், வீட்டில் சாம்பார் சொற்ப அளவே இருந்தது. கணவரை உணவருந்த அழைத்தேன், கொஞ்சமிருந்த சாம்பார் அனைத்தையும் அவருக்கு ஊற்றி உணவு பறிமாறினேன். கணவர் திருப்தியாகச் சாப்பிட்டு எழுந்ததும், நானோ சட்னி அரைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட கணவர், 'சாம்பார் இல்லையா?' என்று கேட்டார்; இல்லை, என்றேன். 'சமைக்கிறது நீ, அதுல உனக்கு கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?' என்றார் கணவர்' என்று அந்த நிகழ்வினை எங்குடன் அவர் பகிர்ந்துகொண்டார். ஊழியத்தின் ஆரம்பகால விலைக்கிரையத்தை, ஆகாரத்தில்கூட அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது எனனும் வரிகளை என்னால் அப்போது வாசிக்க முடிந்தது, என் சிந்தையிலும் யோசிக்க முடிந்தது.

www.sinegithan.in